வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பொழிந்துகொண்டிருக்கிறது , இந்த மழை காலத்தையொட்டிய என் நினைவுகளை முகிழ்த்து பார்க்கிறேன். விவசாயத்தை பொறுத்த வரையில் எங்கள் பகுதியில் எந்த ஆறுகளும் இல்லை,பெரும்பாலும் கால்வாய் மற்றும் கண்மாய் பாசனம் தான். ஆடி முதல் தை வரையிலான காலம் ரொம்பவே பசுமையாய் இருக்கும்.
தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது இரு போக பகுதிகளில் விவசாய வேலைகள் தொடங்கிவிடும். ஒவ்வொரு விவசாயியும் முல்லை பெரியாறு , வைகை அணைகளின் நீர் மட்டத்தை தினமும் உன்னிப்பாய் கவனித்து கொண்டிருப்பான். அங்கே அணையில் ஏறும் ஒவ்வொரு அடிக்கும் இவன் நம்பிக்கையும் இருமடங்கு ஏறும். ஒவ்வொரு நாளும் பேருந்தில் பள்ளிக்கு செல்லும் போதும் செல்லும் வழி எல்லாம் விவசாய வேலைகள் நடைபெறுவதை பார்க்கையில் என் மனதில் இனம் புரியாத ஆனந்தம் ஏற்படும். நானே அந்த நிலத்தின் உரிமையாளராக மாறி விடுவேன். நாற்றங்கால் அமைப்பது,வரப்பு வெட்டி,உழுது களையெடுத்து அனைத்தையுமே மேற்பார்வை செய்வேன் ஒவ்வொரு நாளும். காலையில் செல்லும் போது நான் பார்த்த வேலைகள் அனைத்தும் மாலையில் பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது முடிந்துள்ளதா என்று ஆர்வத்துடன் பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் அந்த பசுமையின் ரம்மியத்தை அள்ளிப் பருகி ஆனந்தம் அடைவேன்.
அப்புறம் வடகிழக்கில் தான் எங்கள் பகுதிகளில் மழை அதிகமாய் இருக்கும்.அப்போது தான் ஒரு போக சாகுபடி துவங்கும் .பருவ மழை காரணமாக கண்மாய்கள் நிரம்ப ஆரம்பிக்கும். கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வது , சிறு சிறு ஓடைகளில் நீர் பாய்வது , வெள்ளி போன்றல்லாது செம்மண் நிறத்தில் அவற்றை பார்க்கும் போதும் பேரானந்தம் என்னுள் பிரவாகிக்கும். பசுமையான நாற்று முதல் பழுப்பான கதிர் வரை அனைத்துமே பேரானந்தம். வெள்ளத்தால் பயிர் மூழ்கும் போதும், மழை இல்லாமல் அவை காயும்போதும் இதயத்தை அறுக்கின்ற வலியை உணர்ந்துள்ளேன்.ஒரு பார்வையாளனாக எனக்கே இவ்வளவு ஆர்வமும்,அக்கறையும் இருந்தால் அந்த விவசாயிக்கு எப்படி இருக்கும். அவனும் ஒரு தாயை போல் மாறிடுவான் அல்லவா. அந்த அனுபவத்தை ஒவ்வொருவனும் வாழ்வில் ஒரு முறையாவது துய்க்க வேண்டும். நானும் ஒரு விவசாயியாய் என் வாழ்வில் ஒரு பகுதியையாவது அனுபவிக்க விரும்புகிறேன்.