Monday, 28 July 2008

தமிழா... விழித்துக்கொள்

நீரின்றி அமையாது உலகு - என்றான் வள்ளுவன்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே.
தமிழன் தீர்க்கதரிசி அல்லவா ...
கரிகாலன் கட்டினான் கல்லணையை பிரமாண்டமாய்
காவிரியை தடுத்துப் பிரித்தான்,
தஞ்சை தரணி பசுமையில் குலுங்கியது
கர்ம வீரன் தேக்கினான் வைகையை
ராமநாத புரமும் சிவகங்கையும் சிரித்தது
தென்மேற்கும் வடகிழக்கும் போட்டியிட்டன - பொழிவதில்
ஆடிப் பெருக்கில் அக மகிழ்ந்தான் தமிழன்
ஆற்று வெள்ளத்தில் சுவடிகளை விட்டுக் கொண்டே ....

இன்றோ...

கருநாடகம் தடுத்துவிட்டது காவிரியை
கேரளம் வஞ்சித்து விட்டது வைகையை
ஆந்திரமும் அணை கட்ட போகுதாம் பாலாற்றில்
இது மட்டும் தானா
தென்மேற்கும் வடகிழக்கும் போட்டியிடுகின்றன - பொய்ப்பதில்
மழையின்றி மலடி ஆனது பெண்ணையும் பொருநையும்
ஆடிப் பெருக்கில் வெள்ளமும் இல்லை
ஆற்றில் விட சுவடிகளும் இல்லை
பார்த்தாயா தமிழா உன் நிலைமையை ....
ஆயினும் நீ வள்ளலடா
நீர் தர மறுப்பவனுக்கும் நீ
வாரி வழங்குகிறாய் அரிசி,முட்டை,மின்சாரம் ...
வாழி நீ வளமுடன்

இன்று நீரில்லை விவசாயம் செய்ய
நீ ஏமாந்தால் நீரின்றி போகும் குடிப்பதற்கே ...

அதனால் ....

தமிழா ஒன்று சேர்
உன் ஆறுகளை ஒன்று சேர்
வங்கக் கடல் கேட்டதா உன்னிடத்தில் நீர் போதவில்லையென்று
பிறகு ஏன் வாரி இறைக்கிறாய் ஐப்பசி கார்த்திகையில்
நீயும் பிரித்தாள்கை செய் உன் ஆறுகளை

உன் ஆறுகளுக்கு மணமுடித்து விடு
அவற்றின் குழந்தைகளை சேர்ந்து விளையாட விடு
நீருயரும் நிலத்தடியில் ...
நீருடைய தமிழகம் பிறக்கும்
உழவன் செழிப்பான்,
அதனால் நாம் செழிப்போம் நாடு செழிக்கும்.