Sunday, 20 July 2008

எனக்கு பிடித்த மதுரை


தமிழகத்தின் பெரிய நகரங்களுள் ஒன்று , சொல்லப் போனால் மதுரை ஒரு மிக பெரிய கிராமம் . உண்மைதான் வளர்ச்சி அடைந்த ஒரு கிராமம். அதன் கிராமியமும், கலாசாரமும்,பழம்பெருமையும் தமிழக வரலாற்றில் மறுக்கவோ மறைக்கவோ முடியாது . சங்க காலம் முதல் இன்று வரையிலும் தமிழர் தம் வாழ்வியலை உலகிற்கே பறைசாற்றிக் கொண்டிருக்கிறது .

வைகை நதியோரம், 2600 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது மதுரை. முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாய் இருந்தது கோவில் மாநகர் எனப்படும் மதுரை. கீழ்திசையின் ஏதென்ஸ் என்று அழைக்கப்பட்ட நகரம். தமிழகத்தின் மிகப் பழமையான நகரம். ராமாயணத்திலும், அர்த்தசாஸ்திரத்திலும் இடம் பெற்ற பெருமைக்குரியது.

வரலாற்று சின்னங்களாக மீனாட்சி அம்மன் கோவில்,மாரியம்மன் தெப்பக்குளம்,திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை இன்றளவும் மிளிர்கின்றன. மதுரை நகரின் தனிச் சிறப்பே, அதன் நகர வடிவப்மைப்புதான். மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து, அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகள் பழம் தமிழரின் திறமையை காட்டுகின்றன.மதுரையின் பெருமைகளாக பெரும்பாலும் அனைவரும் சொல்லுவது மல்லிகையும் மீனாட்சி அம்மனும் தான் என்னை கேட்டால் அதோடு மதுரையின் அன்றாட வாழ்கையும் தான் என்பேன்.

தொழில் வளம் மதுரையில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை , வணிகம் தான் ...தென் தமிழகத்தின் முக்கியமான சந்தை. ஒவ்வொரு பொருளுக்கும் அல்லது தொழிலுக்கும் தனி தனியான பகுதிகளை பெற்றிருப்பது இதன் சிறப்பு உதாரணமாக நெல்பேட்டை, வெற்றிலைபேட்டை, மாட்டுத்தாவணி (கால்நடை சந்தை நடக்குமிடம்) போன்றவற்றைச் சொல்லலாம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு திறம்பட அமைத்து உள்ளனர் .

அப்புறம் திருவிழாக்கள்....கோவில்கள் அதிகமாக உள்ளதால் விழாக்களும் இங்கே பிரசித்தம் பெற்றவை முக்கியமாக சித்திரை திருவிழா. மதுரையே குலுங்கும் அளவிற்கு சிறப்பாக நடைபெறும் . அப்புறம் வைகை, மதுரையின் தனிச்சிறப்பு, வரலாற்று சிறப்பு வாய்ந்ததும் கூட . இன்று அதில் தண்ணீரைத்தான் பார்க்க முடிவதில்லை, எப்போதாவது தண்ணீரோடு பார்த்தல் மனதில் ஒரு தனி ஆனந்தம். நான் எட்டாம் வகுப்பு படித்த போது வைகையில் செம்மண் நிறத்தில் பொங்கி வந்த வெள்ளத்தை A.V பாலத்தின் மேல் நின்று பார்த்து ரசித்தது இன்றும் நினைவில் நீங்காமல் உள்ளது .

மிக மிக முக்கியமானது மதுரையின் வட்டார தமிழ். எனக்கு மிகவும் பிடிக்கும் ,சொல்லப்போனால் அதன் கவர்ச்சி இன்றளவில் அதிகரித்து விட்டது என்றால் அது மிகை அல்ல. இயற்கையான கேலியும் , நையாண்டியும் மதுரையில், அதன் தமிழில் இழையோடியிருக்கும்.


மதுரை மென்மேலும் வளர்ந்து வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்பது என் போன்றோரின் ஆசை .