Sunday, 28 September 2008

குண்டு வெடிக்குது !!!

என்னங்க இது எதோ சின்ன பசங்க தீபாவளிக்கு தெருவுக்கு தெரு பட்டாசு வெடிக்கிற மாதிரி நம்ம நாட்டுல முக்கியமான ஊர்ல எல்லாம் குண்டு வெடிக்குது.என்னையா பண்ணுறீங்க ? உளவுத்துறை,இழவுத்துறை எல்லாம் ? அவிங்க தான் இவிங்க அப்டின்னு சொல்றதுக்கு எதுக்குயா மாசா மாசம் சம்பளம் வாங்குறீங்க? உங்களுக்கு மேல உள்துறை என்னையா பண்ணுது ?

பழச விட்டுட்டு கொஞ்சமாச்சும் புது டெக்னாலஜி கொண்டு வாங்கையா. உங்கள விட அவிங்க ரொம்ப தெளிவா வேலை பாக்குறாங்க. பக்கத்து நாட்டுக்கு டெக்னாலஜி குடுக்குறத விட்டுட்டு உள்ளூர்ல மொத வேலைய பாருங்க. தப்பு பன்றவன சீக்கிரமா நிரூபிச்சு முச்சந்தில வச்சு சுட்டு கொல்லுங்கையா. அத விட்டுட்டு அடுத்தடுத்து வேடிக்கை பாக்காதீங்க!

Friday, 12 September 2008

அன்று முதல் இன்று வரை-பாகம் இரண்டு-ஆடிய ஆட்டங்கள் !



சின்ன பிள்ளைல இருந்து பெரிய மனிதனா வளர்ந்துட்ட
பின்னாலயும் நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலும்
ரொம்ப முக்கியமானது விளையாட்டு !
கிராமமோ,நகரமோ அவரவர் சூழலுக்கு ஏற்றார் போல
நம்மோட குழந்தை பருவத்தை விளையாட்டுக்களால் நிறைத்திருப்போம். அந்த வகைல நான் ஆடிய ஆட்டங்களை எல்லாம் கோடானு கோடி நொடிகளுக்கு பின்னால் சென்று ஒரு எட்டு பாத்துட்டு வந்திருலாமா !

நான் வளர்ந்த சூழல் அதாவது என்னோட ஊர்
ஒரு குட்டி நகரம், கிராமத்தின் சாயல்கள்
மிகுந்தது. ஒவ்வொரு குழந்தையும் அது உயரத்துக்கு
ஒரு ஆள் கூட தோள் மேல கை போட்டுட்டு தான்
அதோட நட்பையும்,விளையாட்டையும் ஆரம்பிக்கும்.என்னன்னு
யாராலையும் சொல்ல முடியாத பெயர் கூட
இல்லாத விளையாட்டுக்கள் தான் அந்த வயதின்
பொழுதுபோக்கு! எல்லாரும் கண்டிப்பாய் அப்படி இருந்தவர்கள் தான்.

அப்புறம் பள்ளிக்கூடம் போன பிறகு ஒவ்வொரு மாலையும்,வார விடுமுறைகளும்ரம்மியமானவை. இந்த வயசுல வீட்டுக்கு அக்கம் பக்கத்துலையே ஒரு கூட்டத்த சேர்த்து வச்சிருப்போம். சுட்டி பானை/செப்பு சாமான் வச்சு விளையாடுறது, ரயில் ஓட்டுறது அப்படின்னு அம்மா சாப்பிட கூப்பிடுற வரைக்கும் ஆட்டம் தான். யார் கிட்ட அதிகமான செப்பு இருக்கோ அவங்க தான் தலை! அப்படி இல்லாட்டி எல்லா கோஷ்டிக்கும் ஒரு நிரந்தர தலை இருக்கும். புது உறுப்பினர் சேர்கை/நீக்கம் எல்லாம் தலை சொல்றதுதான்! சண்டை போட்டவங்களோட காய் சொல்றது
இல்லாட்டி பழம் விடுறது எல்லாம் அவரு சொல்றது தான் !
கிட்ட தட்ட ஒரு கட்சி தலைவர் மாதிரி!கல்லா மண்ணா, திருடன் போலீஸ் , சாட் பூட் த்ரீ எனப்படும் ஐஸ் பாய்,கரண்ட் பாக்ஸ்,பூ பறிக்க வருகிறோம் அப்டின்னு எக்கச்சக்கமான விளையாட்டுகள் !


அடுத்த பரிமாணங்கள் குண்டு(கோலி),பம்பரம்,கிட்டி புள்ள போன்ற விளையாட்டுக்கள். இந்த ஆட்டம் எல்லாம் சுழற்சி முறைல மாறி மாறி வரும். வீட்டுல எங்களோட வங்கில எப்பவுமே இந்த ஆட்டங்களுக்கு தேவையான பொருட்கள் பொக்கிசமா பத்திரமா இருக்கும்.
நானும் என்னோட அண்ணனும் ரெண்டு மூணு டப்பா நிறைய குண்டு சேர்த்து வச்சிருந்தோம்.அந்த குண்டுகள பார்த்து வாங்குறது ஒரு கலை,விளையாடுறதும் தான்! சிட்டு குருவி ,குழி குண்டு அப்டின்னு நிறைய வகையறாக்கள் இருக்கு. ஒவ்வொரு தெருவுக்கும் விதி முறைகள் மாறும்.


அப்புறம் பம்பரமுனு பார்த்தா அதுலயும் நிறைய கம்ப சூத்திரங்கள் !
ஆக்கர் எனப்படும் கலைச்சொல் தான் இங்கே தாரக மந்திரம். அதாவது
நம்ம பம்பரத்தால சிக்குறவன் பம்பரத்த பொளக்குரது ! அப்புறம் கோஸ் எடுக்கிறது. இது கிட்ட தட்ட சாட் பூட் த்ரீ போடுற மாதிரி, யாரு மொதல் தடவ சிக்குரான்னு பார்ப்பது! பம்பரதுல சாட்டைய சுத்தி தயாரா வச்சுட்டு எல்லாரும் ஒரே நேரத்துல பம்பரத்த விட்டு அப்புறம் மறுபடியும் சாட்டையால் அப்டியே அலுங்காம தூக்கிப் போட்டு பிடிக்கணும்.
யாரு கடைசியா பிடிக்கிறானோ அவன்தான் ஊறுகாய் !
ஒரு தடவ பம்பரம் விளையாடிட்டு இருந்தப்போ அம்மா கடைக்கு போக சொல்லி கூப்ட்டு நான் போகாம அடி வாங்குனது ஒரு மின்னல் மாதிரி இந்த நேரத்துல கடந்து போகுது.


வந்துட்டான்யா கிட்டி புள்ள ! தமிழகத்தின் சொத்து ! அதிகம் சொல்ல தேவை இல்லை, நிறைய பேர் நெறைய சட்டி பானை அப்புறம் சில பல மண்டைகல பேத்துருபீங்க ! லாவகமா சுழற்றி ரொம்ப தூரத்துக்கு அடிக்கிறது தான் திறமை.


இவங்க எல்லாத்தையும் தூக்கி சாப்ட வந்தானே ஒருத்தன் வேற யாரும் இல்லைங்க-நம்ம பாழா போன கிரிக்கெட் தாங்க சோறு தண்ணி இல்லாம,எரிக்கிற வெயில்ல தெரு விட்டு தெரு, ஊர் விட்டு ஊர் அப்டின்னு சர்வம் கிரிக்கெட் மயம். மட்டை,பந்து அதுக்காக காசு சேக்குறது.அத இழைச்சு இழைச்சு மெருகேத்துறது அப்டின்னு கிரிக்கெட் பைத்தியம்
தலைக்கேறி, சுத்தினோம்.வார விடுமுறை,கோடை விடுமுறை அப்டினாலே அவ்வளவு தான்.ரப்பர்பந்து,பிளாஸ்டிக் பந்து எதுவும் சிக்கலைனா சோள தட்டை
(ஏன் மட்டைக்கு பதிலா பரீட்சை அட்டைகள வச்சு கூட ஆடியிருக்கோம்) அப்டின்னு கிரிக்கெட் கிறுக்கு புடிச்சு அலைஞ்சோம். வெளிய ஆடுறது பத்தாதுன்னு அப்பப்போ வீட்டுக்குள்ளேயும் !இந்த வெயில்ல நாய் கூட சுத்தாதுடா நீங்க எப்படிடா இப்படி மட்டையும் கையுமா
அலையுறீங்க அப்படின்னு எல்லாரும் கண்டிப்பா திட்டு வாங்கிருப்போம்.அந்த வார்த்தைகள்,திட்டுக்கள் எல்லாம் இப்போ காதுல கிச்சு கிச்சு மூட்டி ஒரு ஆனந்தத்தை குடுக்குது.


இதுக்கு இடைல சதுரங்கம்,இறகு பந்து,கை பந்து அப்டின்னு வந்திட்டு போன விருந்தாளிகளும் இருக்காங்க.கை பந்து மேல்நிலை படிக்கும் போதும்,கால்பந்து,கூடைபந்து போன்றவை கல்லூரியின் போதும் அறிமுகமாகியது.

இன்றைக்கும் கிரிக்கெட் மீது ஒரு ஈர்ப்பு அல்லது ஒரு வெறி இருந்துட்டுதான் இருக்கு. என்ன தான் இருந்தாலும் அந்த பால்ய வயது ஆட்டங்கள நினைக்கிறப்போ எல்லாம் ஒரு மெல்லிய தென்றல் மாதிரி,குற்றால சாரல் மாதிரி ஒரு குதூகலத்தையும், உற்சாகத்தையும் கொட்டி குடுத்துகிட்டே இருக்கும், நினைவிருக்கும் வரை !!!

Thursday, 11 September 2008

அன்று முதல் இன்று வரை-நொறுக்குத்தீனி அல்லது தின்பண்டங்கள்


தலைப்பே சிரிக்கிற மாதிரி இருக்கா ?
ஆமாங்க சிரிக்கிற அதே சமயம் நம்மள நாமே திரும்பி பாக்குற விஷயம்
பொருட்கள் வேறுபடலாம் ஆனால் எல்லாரும் நினைச்சு மகிழும் பசுமையான நாட்கள் ... இதோ

பள்ளிக்கூடங்களில் ஆரம்ப பள்ளி வயதில்
இடைவேளை நேரங்கள் அல்லது மாலை நேரங்களில் பெரும்பாலும் விரும்பிய பதார்த்தங்கள்
ஆரஞ்சு மிட்டாய் குச்சி ஐஸ் , சூரம் பழம்,தேன் மிட்டாய்,இலந்தை வடை,நெல்லிக்காய், சோள கதிர்(மக்கா சோளம்)
(சோள தட்டைய வச்சு கிரிக்கெட் விளையாடுறது வேற கதை)
இன்னும் நிறைய இருக்கு
மதியம் வீட்டுக்கு பறந்து(மனசுக்குள்ளயே) போய் மதியான சாப்பாடு
திரும்பி வரப்போ அம்மாகிட்ட வாங்குற கால் ரூபா அல்லது பத்து பைசாஅதுல தான் எவ்வளோ வாங்கினோம் !

இப்போ என்னடானா பணவீக்கம் அப்டின்குறான்
பை நிறைய பணம் கொண்டு போனாலும்
ஒரு கை நிறைய கூட வாங்க முடியல ?
எவ்வளோ மாறிட்டோம் இல்லாட்டி மாறிடுச்சு !



அப்புறம் நடுநிலை பள்ளி வயதில் (இது நடக்குது மதுரைல ங்கோ)
அதே சோள கதிர் !
குச்சி ஐஸ் மாறி இப்போ கப் ஐஸ் அப்புறம் பெப்சி ஐஸ்
இப்போ தான் ஒரு முக்கியமான இடம் வருது-மதியான சாப்பாடு
காலைல சோத்து டப்பா ல திணிச்சு கொடு வர்ற இட்லி/தோசை இல்லாட்டி பழைய சோறு எல்லாம் பறந்துடும் கொஞ்ச நேரத்துலையே(நண்பர்கள் மத்தியில்)
அவ்வப்போது வகுப்பு நேரங்களிலும்(திருட்டு தனமாத்தான்-மாட்டிக்கிட்டதும் உண்டு)
அப்புறம் தான் கூட்டாஞ்சோறு ....அப்பப்பா எத்தனை வீட்டு சாப்பாடு? ஏழை,பணக்காரன்,ஜாதி அப்டிங்கற எந்த கருமாந்திரமும் பார்த்தது இல்ல. அமிர்தம் தான் போங்க !
அப்ப அப்போ சத்துணவு வேற
நினைத்தாலே கண்கள் ஆனந்தத்தில் குளமாகும் பள்ளிக்கூட பசுமைகள் ஒவ்வொருத்தரும் எவ்வளோ மகிழ்ச்சியா இருந்திருக்கோம் இல்ல ?
எத்தனை நண்பர்கள்,எவ்வளோ பாசம், நட்பு,அடிதடி ?



சரி அடுத்து பாத்தோம்னா மேல்நிலை பள்ளி வாழ்க்கைங்கோ
ஆனால் இங்கே விடுதி வாசமுங்கோ
அதனால் வார விடுமுறை நாட்கள் தானுங்க சொர்கமே
ஏன் அப்டினா அப்போ தான் எல்லார் வீட்ல இருந்தும் அப்பா,அம்மா பார்க்க வருவாங்க
அதுல பார்த்தா முதல காராசேவு தான் அத தான் பசங்க வாரம் வச்சு சாப்பிட முடியும் பள்ளி கூடத்துல விக்கிற முறுக்கு ரொம்ப நல்லா இருக்கும்இங்கே தினமும் வந்து செல்லும் மாணவ நண்பர்கள் தான் பெரிய வரமே !
விடுதி சாப்பாடு சாப்டுட்டு நாக்கு செத்து போய் இருக்கிறப்போ எங்களுக்கெல்லாம் கிடைக்குற பெரிய ஆறுதல் !
இங்கேயும் ஜாதி,மதம்,பணம் எதுவும் பார்த்தது இல்ல
விடுதில இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு போறப்போ எதோ பாலைவன சோலை மாதிரி தான் நாளைக்கு கிடைக்காதே அப்டின்னு நினைச்சு நினச்சே எல்லாத்தையும் வெளுத்து வாங்குறது,
வீட்லயும் புள்ள பாவம் அப்டின்னு கேக்குறது கேட்காதது எல்லாமே கிடைக்கும் வீட்ல இருந்து வந்ததும் எல்லாரும் அவனவன் கொண்டு வந்ததை பகிர்ந்து சாப்டறது அருமை !


இப்போ கல்லூரி ...
கான்டீன்-இடைவேளைகளின் இன்பலோகம்
டீ,பப்ஸ்,பூரி போன்ற வகையறாக்கள் மாலை சுட சுட வடை அப்புறம் விடுதி டீ !


இப்போ வேலை பாக்குற பெங்களூருல
கவர்ச்சிகரமா,சுகாதாரமா அடைக்கப்பட்ட அந்நிய நாட்டு பதார்த்தங்கள்
தேன் மிட்டாயும் இன்ன பிற வஸ்துக்களும் வழக்கொழிந்து போயிருச்சு ஆனாலும் நான் ஊருக்கு போனால் தேன் மிட்டாய் கொண்டு வர சொல்லுறாங்க நண்பர்கள் !!!

பிட்சா,பர்கர் அப்டின்னு வெள்ளைக்காரன் கோடி பேர் வந்தாலும் அடி மனசுல எல்லாரும் இன்னும் அந்த பள்ளிக்கூட நாட்களையும் அப்புறம் அந்த தீனிகளையும் நினைச்சு ஆனந்த படுறத மறுக்கவோ மறைக்கவோ முடியாது


அடுத்த அன்று முதல் இன்று வரை ல சந்திக்கலாம் !!!