Friday, 12 September 2008
அன்று முதல் இன்று வரை-பாகம் இரண்டு-ஆடிய ஆட்டங்கள் !
சின்ன பிள்ளைல இருந்து பெரிய மனிதனா வளர்ந்துட்ட
பின்னாலயும் நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலும்
ரொம்ப முக்கியமானது விளையாட்டு !
கிராமமோ,நகரமோ அவரவர் சூழலுக்கு ஏற்றார் போல
நம்மோட குழந்தை பருவத்தை விளையாட்டுக்களால் நிறைத்திருப்போம். அந்த வகைல நான் ஆடிய ஆட்டங்களை எல்லாம் கோடானு கோடி நொடிகளுக்கு பின்னால் சென்று ஒரு எட்டு பாத்துட்டு வந்திருலாமா !
நான் வளர்ந்த சூழல் அதாவது என்னோட ஊர்
ஒரு குட்டி நகரம், கிராமத்தின் சாயல்கள்
மிகுந்தது. ஒவ்வொரு குழந்தையும் அது உயரத்துக்கு
ஒரு ஆள் கூட தோள் மேல கை போட்டுட்டு தான்
அதோட நட்பையும்,விளையாட்டையும் ஆரம்பிக்கும்.என்னன்னு
யாராலையும் சொல்ல முடியாத பெயர் கூட
இல்லாத விளையாட்டுக்கள் தான் அந்த வயதின்
பொழுதுபோக்கு! எல்லாரும் கண்டிப்பாய் அப்படி இருந்தவர்கள் தான்.
அப்புறம் பள்ளிக்கூடம் போன பிறகு ஒவ்வொரு மாலையும்,வார விடுமுறைகளும்ரம்மியமானவை. இந்த வயசுல வீட்டுக்கு அக்கம் பக்கத்துலையே ஒரு கூட்டத்த சேர்த்து வச்சிருப்போம். சுட்டி பானை/செப்பு சாமான் வச்சு விளையாடுறது, ரயில் ஓட்டுறது அப்படின்னு அம்மா சாப்பிட கூப்பிடுற வரைக்கும் ஆட்டம் தான். யார் கிட்ட அதிகமான செப்பு இருக்கோ அவங்க தான் தலை! அப்படி இல்லாட்டி எல்லா கோஷ்டிக்கும் ஒரு நிரந்தர தலை இருக்கும். புது உறுப்பினர் சேர்கை/நீக்கம் எல்லாம் தலை சொல்றதுதான்! சண்டை போட்டவங்களோட காய் சொல்றது
இல்லாட்டி பழம் விடுறது எல்லாம் அவரு சொல்றது தான் !
கிட்ட தட்ட ஒரு கட்சி தலைவர் மாதிரி!கல்லா மண்ணா, திருடன் போலீஸ் , சாட் பூட் த்ரீ எனப்படும் ஐஸ் பாய்,கரண்ட் பாக்ஸ்,பூ பறிக்க வருகிறோம் அப்டின்னு எக்கச்சக்கமான விளையாட்டுகள் !
அடுத்த பரிமாணங்கள் குண்டு(கோலி),பம்பரம்,கிட்டி புள்ள போன்ற விளையாட்டுக்கள். இந்த ஆட்டம் எல்லாம் சுழற்சி முறைல மாறி மாறி வரும். வீட்டுல எங்களோட வங்கில எப்பவுமே இந்த ஆட்டங்களுக்கு தேவையான பொருட்கள் பொக்கிசமா பத்திரமா இருக்கும்.
நானும் என்னோட அண்ணனும் ரெண்டு மூணு டப்பா நிறைய குண்டு சேர்த்து வச்சிருந்தோம்.அந்த குண்டுகள பார்த்து வாங்குறது ஒரு கலை,விளையாடுறதும் தான்! சிட்டு குருவி ,குழி குண்டு அப்டின்னு நிறைய வகையறாக்கள் இருக்கு. ஒவ்வொரு தெருவுக்கும் விதி முறைகள் மாறும்.
அப்புறம் பம்பரமுனு பார்த்தா அதுலயும் நிறைய கம்ப சூத்திரங்கள் !
ஆக்கர் எனப்படும் கலைச்சொல் தான் இங்கே தாரக மந்திரம். அதாவது
நம்ம பம்பரத்தால சிக்குறவன் பம்பரத்த பொளக்குரது ! அப்புறம் கோஸ் எடுக்கிறது. இது கிட்ட தட்ட சாட் பூட் த்ரீ போடுற மாதிரி, யாரு மொதல் தடவ சிக்குரான்னு பார்ப்பது! பம்பரதுல சாட்டைய சுத்தி தயாரா வச்சுட்டு எல்லாரும் ஒரே நேரத்துல பம்பரத்த விட்டு அப்புறம் மறுபடியும் சாட்டையால் அப்டியே அலுங்காம தூக்கிப் போட்டு பிடிக்கணும்.
யாரு கடைசியா பிடிக்கிறானோ அவன்தான் ஊறுகாய் !
ஒரு தடவ பம்பரம் விளையாடிட்டு இருந்தப்போ அம்மா கடைக்கு போக சொல்லி கூப்ட்டு நான் போகாம அடி வாங்குனது ஒரு மின்னல் மாதிரி இந்த நேரத்துல கடந்து போகுது.
வந்துட்டான்யா கிட்டி புள்ள ! தமிழகத்தின் சொத்து ! அதிகம் சொல்ல தேவை இல்லை, நிறைய பேர் நெறைய சட்டி பானை அப்புறம் சில பல மண்டைகல பேத்துருபீங்க ! லாவகமா சுழற்றி ரொம்ப தூரத்துக்கு அடிக்கிறது தான் திறமை.
இவங்க எல்லாத்தையும் தூக்கி சாப்ட வந்தானே ஒருத்தன் வேற யாரும் இல்லைங்க-நம்ம பாழா போன கிரிக்கெட் தாங்க சோறு தண்ணி இல்லாம,எரிக்கிற வெயில்ல தெரு விட்டு தெரு, ஊர் விட்டு ஊர் அப்டின்னு சர்வம் கிரிக்கெட் மயம். மட்டை,பந்து அதுக்காக காசு சேக்குறது.அத இழைச்சு இழைச்சு மெருகேத்துறது அப்டின்னு கிரிக்கெட் பைத்தியம்
தலைக்கேறி, சுத்தினோம்.வார விடுமுறை,கோடை விடுமுறை அப்டினாலே அவ்வளவு தான்.ரப்பர்பந்து,பிளாஸ்டிக் பந்து எதுவும் சிக்கலைனா சோள தட்டை
(ஏன் மட்டைக்கு பதிலா பரீட்சை அட்டைகள வச்சு கூட ஆடியிருக்கோம்) அப்டின்னு கிரிக்கெட் கிறுக்கு புடிச்சு அலைஞ்சோம். வெளிய ஆடுறது பத்தாதுன்னு அப்பப்போ வீட்டுக்குள்ளேயும் !இந்த வெயில்ல நாய் கூட சுத்தாதுடா நீங்க எப்படிடா இப்படி மட்டையும் கையுமா
அலையுறீங்க அப்படின்னு எல்லாரும் கண்டிப்பா திட்டு வாங்கிருப்போம்.அந்த வார்த்தைகள்,திட்டுக்கள் எல்லாம் இப்போ காதுல கிச்சு கிச்சு மூட்டி ஒரு ஆனந்தத்தை குடுக்குது.
இதுக்கு இடைல சதுரங்கம்,இறகு பந்து,கை பந்து அப்டின்னு வந்திட்டு போன விருந்தாளிகளும் இருக்காங்க.கை பந்து மேல்நிலை படிக்கும் போதும்,கால்பந்து,கூடைபந்து போன்றவை கல்லூரியின் போதும் அறிமுகமாகியது.
இன்றைக்கும் கிரிக்கெட் மீது ஒரு ஈர்ப்பு அல்லது ஒரு வெறி இருந்துட்டுதான் இருக்கு. என்ன தான் இருந்தாலும் அந்த பால்ய வயது ஆட்டங்கள நினைக்கிறப்போ எல்லாம் ஒரு மெல்லிய தென்றல் மாதிரி,குற்றால சாரல் மாதிரி ஒரு குதூகலத்தையும், உற்சாகத்தையும் கொட்டி குடுத்துகிட்டே இருக்கும், நினைவிருக்கும் வரை !!!