Saturday, 25 October 2008

வெறும் வாய்க்கு அவல் கிடைத்து விட்டதோ?

நணபர்களே , இலங்கையில் போர் வலுத்துக் கொண்டிருக்கிறது, ஒரு இன அழிப்பு முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு அடிவாங்கிக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. தனது ஆற்றாமையை அப்பாவி மக்களின் மீது காட்டி கணக்கிலாமல் அவர்களை கொன்றும் , விரட்டியும் மகிழ்கிறது. பழி எல்லாம் புலிகளின் மேலே.

நிலைமை இவ்வாறு இருக்க இன்று தமிழகத்தில் ஈழ ஆதரவு தீ பற்றி எரிகிறது, இனத்தான் அழுகிறான் என்பதற்காகவா ? அல்லது தேர்தல் வருகிறது என்பதற்காகவா ? முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்கள் இந்த போராட்டத்தை துவக்கி வைத்தாரே இதை ஏன் எப்போதோ செய்யவில்லை ? நாளை நமதே நாற்பதும் நமதே என்று சொல்லி நாற்பதையும் மத்திய அரசில் வைத்து அழகு பார்த்தாரே அப்போதே இதை ஆரம்பித்து இருந்தால் இன்றைய நிலைமை மாறி இருக்குமே ?

மத்திய அரசு ரேடார்களையும்,கூட்டு ராணுவ பயிற்சியையும் அளிக்காமல் தடுத்திருந்திருக்கலாமே ? இவர் அசைந்தால் அசையும்படியாக தானே மத்திய அரசு அமைந்து இருந்தது. இப்போது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறாரோ ? சரி போகட்டும் விடுங்கள் இன்றாவது இந்த வேள்வி தீயை பற்ற வைத்ததற்காக நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். ஆனால் நடப்பது என்ன ஈழத்தை வைத்து இவர்கள் ஈனத்தனமான அரசியல் செய்து கொண்டிருகிறார்கள். அனைத்து கட்சி கூட்டத்தை புறகணித்தது முதல் ராமேஸ்வரத்தில் தமிழ் திரை உலகினர் நடத்திய பேரணி வரை அனைத்திலும் அவரவர்களின் பிரதாபங்களும்,அரசியல் மட்டுமே மிகைத்திருந்தது. நம்மிடம் இதை தான் கேட்டார்களா நம் தாய் மக்கள் ?

கொடுக்க பாலின்றி, அழுத குழைந்தைகள் அழ, அடைவதற்கு அடுத்த நிழல் தேடி நாடோடி வாழ்கை வாழ்கின்றனர் அடுத்த குண்டு எங்கே விழுமோ ? என்னும் அடுத்த நொடி எதிர்காலம் தொலைத்தவர்களாய் ..... அவர்கள் படும் அல்லலை நம்மால் கை கொண்டு நேரடியாய் துடைத்து ஒழிக்க முடியா விட்டாலும் இவ்வாறு அவர்கள் பெயரை சொல்லி அசிங்கம் செய்யாமலாவது இருங்களேன் என் தமிழ் நெஞ்சங்களே . அவர்கள் உங்களின் அனுதாபத்திற்கு ஏங்கவில்லை, அவர்களின் விடுதலைக்கு போரிட தோள் கேட்கவில்லை .அவர்களும் சோழ,சேர ,பாண்டிய வழி வந்தவர்கள் தானே ? வீரமும், நுட்பமும் செறிந்தவர்கள் தான். அவர்கள் கேட்பது எல்லாம் அவர்களுடைய கோரிக்கைக்கான அங்கீகாரத்தைதான்.

முடிந்தால் கொடுங்கள் இல்லாவிடில் விடுங்கள் . அவர்களுடைய உணர்வுகளை கொச்சைப்படுத்தி அதில் குளிர் காயாதீர்கள்.