சமீப காலமாக நம் தமிழகத்தில் உறுப்பு தானம் பற்றி மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ஹிதேந்திரன் என்ற இளைஞன் தொடங்கி வைத்த இந்த சுடர் இன்று பலரது வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூளை சாவடைந்த தன் மகனின் உறுப்புகளை தானமாய் வழங்க முடிவெடுத்த அந்த மருத்துவர் தம்பதிகளுக்கு முழு தமிழகமுமே நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளது. அவரகளது அந்த பரந்த மனமும் அதனை மக்களுக்கு சிறப்பான முறையில் கொண்டு சேர்த்த நம் ஊடகங்களும் இன்று உறுப்பு தானம் பற்றிய சிறப்பான விழிப்புணர்வை நம் சமுதாயத்தில் விதைத்துள்ளனர். அதன் பலனாக கடந்த சில வாரங்களில் பல உறுப்பு தான நிகழ்வுகள் நடைபெற்று உள்ளன. விபத்தில் மூளை சாவடைந்த அல்லது இறந்த சிலர் கண்,சிறுநீரகம்,இதயம் போன்ற கோடி கொடுத்தாலும் கடைகளில் கிடைக்காத உடல் உறுப்புகளை தானமாய் கொடுத்து இந்த உலகில் மறு பிறவி எடுத்து வாழ்கின்றனர்.
பிரேத பரிசோதனை நடத்தவே கொந்தளிக்கும் நம் சமுதாயத்தில் மக்கள் தாமாகவே முன் வந்து தம்முடைய மகன்/மகள் அல்லது உறவினர்களின் உறுப்புகளை தானமாக வழங்க முன் வருவது நிச்சயம் நாம் அனைவரும் பெருமை பட வேண்டிய ஒரு அத்தியாவசியமான மாற்றம் தானே.