Saturday, 30 August 2008

ஈழத்து சகோதரர்களின் எதிர்பார்ப்பு



காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்பார்கள்

மாறும் காட்சிகளும் முந்தியதை விஞ்சியே நிற்கின்றன

புயலுக்கு பின்னும் புயலே அடித்து கொண்டிருந்தால்

என்ன செய்வது ...

வாழ்வென்பது வாழத்தான் என்பது பொய்யாகி

அழுவதற்கு என்றாகி போனதே !

அழுதழுது கண்ணீர் சுரப்பிகளும் வற்றிவிட்டனவே

எம் சந்ததிக்கு சிரிப்பென்பதே தெரியாமல் போனதே

மகிழ்ச்சி என்பது கானல் நீர்தானோ

வசந்தம் வரவேண்டும்,வாழ்வை தரவேண்டும்

தருவானா அந்த வல்லான்

நம்பிக்கையுடன் நொடிகளை நகர்த்துகிறோம்

கந்தக வாசத்தையும் சத்தத்தையும் தொலைக்கும் காலத்தை நோக்கி நடக்கிறோம்

எம் நிலத்தில் யாம் மகிழ்ந்துகுலாவும் நாள் வருமென்ற நம்பிக்கையில்

நல்ல முடிவென்று ஒன்று உள்ளதென்ற நம்பிக்கையில்.

Friday, 22 August 2008

இன்று பிறந்த நாள் சென்னைக்கு ...


சிங்கார சென்னை,தமிழகத்தின் இதயம் என்றால் மிகை அல்ல.தமிழகத்தின் அரசியல் பொருளாதார மையம்.தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்தம் 39விழுக்காடு சென்னை மண்டலத்தில் இருந்து மட்டும் கிடைக்கிறது.தகவல் தொழில்நுட்பம்,வாகனம்,மின்னணு பொருள் உற்பத்தி,மருத்துவம் மற்றும் உயர் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.
கொஞ்சம் சென்னையின் வரலாற்றை பார்ப்போமா ...
கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

இன்றைய தினம் தான் அதாவது 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் நாள் முதன் முதலில் ஆங்கிலேயர்கள் கால் பதித்தனர். அன்றைய தினம் சென்னைப்பட்டினம் என்ற ஒரு சிறிய மீனவ கிரமமாக இருந்தது.பின்னர் ஆங்கிலேயர் அந்த இடத்தை தங்களது வணிகத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தனர். அன்றிலிருந்து சென்னை வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. அங்கிலேயர் மற்றும் பிரஞ்சு நாட்டவரும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.பின்னர் பிரஞ்சு தன் பார்வையை புதுச்சேரியின் பக்கம் செலுத்தியதால் ஆங்கிலேயர் முழுமையாக சென்னையில் கோலோச்சினர். அதன் பின் சென்னை வேகமாக வளர்ந்தது.ஆங்கிலேயரின் ஆட்சியில் தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கிய இந்நகர் ஒரு மாநகரமாக வளர்ந்தது. பிறகு தென்னிந்தியா முழுவதும் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதை மதறாஸ் மாநிலமாக்கி, மதறாஸ் நகரத்தை அம்மாநிலத்தின் தலைநகராக்கினர்.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் வருடம் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996ஆம் வருடம் தமிழக அரசாங்கம் மதறாஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. சென்னப்ப நாயக்கர் என்பவரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரிட்டிஷார் வாங்கியதால் சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.
1996ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு சென்னை என்று வழங்கப்பட்டு வருகிறது.கிட்டத்தட்ட ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சென்னை நகரின் வளர்ச்சி வியக்கத்தக்கது ஆகும்.











Tuesday, 19 August 2008

இந்திய அணுசக்தி ஒப்பந்தம் - விரிவான பார்வை

இந்தியாவின் எதிர்காலம் குறித்து மட்டுமல்ல, உலகின் ஒடுக்கப்பட்ட மக்களினதும் எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனத்துடன், அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து சமரசமற்றுப் போராடும், இந்திய இடதுசாரிகளும், குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர்களும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான முக்கியமான வரலாற்றுக்கடமையை ஆற்றுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் அமைந்திருக்கும் சர்வ தேசிய அணுசக்தி முகாமைக்கும்; (International Atomic Energy Agency or IAEA) இந்திய அரசுக்கும் ஏற்படவிருக்கும் ‘அணுசக்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஒப்பந்தமும்’ (safeguards agreement) சரி, சமாதான நோக்கிலான அணுசக்தி ஒத்துழைப்புக்காக அந்நிய நாடொன்றுடன் அமெரிக்க அரசு மேற்கொள்ளும், அமெரிக்க ‘123 அணுசக்தி சட்டத்தின்’ (123 Atomic Energy Act 1958) நிபந்தனைகளுக்கு ஒப்ப, இந்தியா அமெரிக்காவுடன் செய்துகொள்ள இருக்கும் பிற்பாடான ஒப்பந்தமும் சரி, இரண்டுமே எவ்வாறு இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதை இடதுசாரிகள் தமது ஆவணங்களிலும் அறிக்கைகளிலும் மிகத் தெளிவாக முன்வைத்திருக்கிறார்கள். அதனிலும் மேலாக அமெரிக்காவின் ஹைடு சட்டம் (Hide Act 2006) எவ்வாறாக இந்தியாவுடனான 123 அணுசக்தி ஒப்பந்தத்தினையும் ‘கட்டுப்படுத்தும்’ என்பதனையும் அவர்கள் தெளிவாக முன்வைத்திருக்கிறார்கள். சர்வதேச அணுசக்தி முகாமையுடனான இந்திய ஒப்பந்தத்தின் வரைவுகள் ‘மீள முடியாத’ ஒரு அழிவுகரமான பின்னல் வலையாக இருக்கிறது என்பதனை அவர்கள் முன்வைக்கிறார்கள். அதன் பின்பாக, அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தம் என்பது இந்தியாவின் அரசியல் பாரம்பரியமான ‘ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணாம்சம்’ என்பதற்கு மாற்றாக, உலகின் ஒடுக்கப்பட்ட மக்களைத் தமது பொருளியல் வேட்கையின் பொருட்டு வேட்டையாடும் ‘அமெரிக்காவின் கூட்டாளி’ என்கிற நிலையில் இந்திய நாட்டை அடிமையின் நிலையில் நிரந்தரமாகப் பிணைத்துவிடும் என்பதனையும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
சீனா என்கிற கம்யூனிச நாடு ‘இத்தகையதொரு’ ஒப்பந்தத்தை ‘ஏற்கனவே’ எட்டியிருக்கிற நிலையில், இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தம் வேண்டாம் என்கிற ‘இரட்டை வேடத்தை கம்யூனிஸ்ட்டுகள் போடுகிறார்கள்’ எனும் அவர்கள் மீதான அமெரிக்க ஆதரவு அறிவிஜீகளினதும் மற்றும் இந்திய ‘அப்துல் கலாமிய’ தேச பக்தர்களினதும் குற்றச்சாட்டுக்கள் எந்த வகையிலும் அர்த்தமற்றதாகும். இடதுசாரிகளின் அறிக்கைகள் திட்டவட்டமாக சீனாவையும் அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு எனும் அடிப்படையிலும், பிற அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுடன் சேர்ந்து சீனாவும் அணு ஆயுதம் கொண்டிராத நாடுகளின் மீது ‘அறமற்ற’ கட்டுப்பாடுகளை விதிக்கிறது எனும் அடிப்படையிலும்தான் அவர்களது ஆவணங்கள் பேசுகின்றன. அணு ஆயுதங்களைத் ‘தாங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி’ குறைக்கவோ அல்லது அழிக்கவோ செய்யாமல், பிற நாடுகளை மட்டும் அணுஆயுத நாடுகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தியா அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான அவர்களது ‘ஒருதலைப்பட்சமான’ கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை எனவே அவர்கள் கோருகிறார்கள். ஒரு அணு ஆயுத நாடு எனும் அளவில் சீனாவின் மீதான பாராட்டு உணர்வு எதனையும் அவர்களது அறிக்கை முன்வைக்கவில்லை. இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை, இந்திய நாட்டின் பாரம்பரியமான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கை, உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுடனான தோழமை என்கிற இந்த மூன்று கொள்கைகளின் அடிப்படையில்தான், இரண்டு அணு ஆயுத ஒப்பந்தங்களின் மேலுமான கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு திரண்டிருக்கிறது. மின்சாரம் தயாரிக்க ஈரானுடனான வாயு ஒப்பந்தத் திட்டம் என்கிற பொருளாதார ரீதியிலான எளிமையான வழி இருக்கும்போது, நமக்குத் தேவையானதில் குறைந்த அளவே மின்சாரம் தரக்கூடிய அணுசக்தித் திட்டத்திற்கு ஏன் இவ்வளவு செலவினம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோருகிறார்கள்.
விலைவாசி உயர்வு, பணவீக்கம், இந்துத்துவம் போன்ற மிகக் கடுமையான நெருக்கடிகள் நாட்டை எதிர் கொண்டிருக்கும் சூழலில் முற்றிலும் பொருத்தமற்ற, இந்திய இறையாண்மைக்கு எதிரான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டங்களை காங்கிரஸ் அரசு செய்து கொண்டிருக்கிறது எனும் அவர்களது கேள்விகள் மிகுந்த தார்மீகத்தன்மை கொண்டவை. சர்வதேச அணுசக்தி முகாமையுடனான ஒப்பந்தம் தொடர்பான இந்திய வரைவை இந்திய மக்களுக்கோ நாடாளுமன்றத்திற்கோ முதலில் அறிவிக்காமல் (இவ்வாறான வரைவை சம்பந்தப்பட்ட எவருக்கும் முன்கூட்டியே முன்வைக்கிற உரிமை இந்திய அரசுக்கு உண்டு என அணுசக்தி முகாமை தெளிவாகத் தெரிவித்திருக்கிறது) அமெரிக்க அரசுடன் தொடர்புள்ள இணையதளத்தில் முதலாவதாக இந்த வரைவு முன் வருவது இந்திய இறையாண்மையை மதிக்கிற செயல்பாடு இல்லை.
அமெரிக்க நிலைப்பாடு தொடர்பாக - குறிப்பாக சாதாரண பாவனைக்கான அணுசக்தி உற்பத்தியையும், தந்திரோபாய ரீதியிலான (அல்லது ராணுவ ரீதியிலான) அணுசக்திச் செயல்பாடுகளையும் தனித்தனியே ‘பிரித்துப் பார்க்க’ அமெரிக்கா ஒப்புக்கொண்டிருப்பதாகவும், ஆகவே நமது நாட்டின் அணுசக்தி சுயாதீனச் செயல்பாட்டுக்கும் தந்திரோபாயச் செயல்பாட்டுக்கும் அமெரிக்கா முட்டுக்கட்டை போடாது என - முன்னுக்குப்பின் முரணாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பேசி வருவது முற்றிலும் அரசியல் போலித்தனம் கொண்டதாகும். அமெரிக்கா திட்டவட்டமாக, அமெரிக்க ஒப்பந்தமானது இந்தியாவின் அணுசக்தி தந்திரோபாயத் திட்டங்களைத் தடுக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஈரானது அணுசக்தி நெருக்கடிப் பிரச்சினையில் அமெரிக்க நிலைப்பாட்டை இந்தியா ஏற்றதுபோலவே எதிர் காலத்தில் உலக அரசியலில் இந்தியா அமெரிக்காவை ஆதரிக்கும் என அதன் ஆட்சியாளர்கள் எதிர்வு கூறுகிறார்கள். இந்தியா அமெரிக்காவை சந்தோசப்படுத்தவில்லையானால், அணுசக்தி உலைகளையும் யுரேனியத்தையும் தருவதையும் நிறுத்திவிடுவது மட்டுமல்ல, அதனோடு தொடர்புகொண்ட நாடுகள் அனைத்தையும் அவ்வாறு நிறுத்துமாறுகோரும் என அமெரிக்கா திட்டவட்டமாகச் சொல்கிறது. அது மட்டுமல்ல இந்தியா சுயாதீனமாக அதன் பின் அணுசக்தி உற்பத்தி அல்லது தந்திரோபாயச் செயல்பாடுகளில் ஈடுபடுமானால், சர்வதேச அணுசக்தி முகாமை, ஈரானைப் போலவே இந்தியாவைக் கண்காணிக்கும், வேட்டையாடும் என்பதனையே இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசுப் பிரதிநிதிகள் சொல்லி வருகிறார்கள். மன்மோகன் சிங் அமெரிக்க-இந்திய ஒப்பந்தம் குறித்து அறிவித்து வருவதற்கு முற்றிலும் நேர்மாறாக அமெரிக்க அரசு சார்ந்தவர்கள் பேசி வருகிறார்கள். இதனையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
II
அணுசக்தி தொடர்பான இன்றைய விவாதங்களைப் புரிந்துகொள்வதற்கு நாம் சில சர்வதேச அமைப்புகளின் தன்மைகளையும், வரலாற்று ரீதியில் உலகில் இப்பிரச்சினை எட்டியிருக்கும் சில ஒப்பந்தங்களையும் புரிந்துகொள்வது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
முதலாவதாக, சர்வதேச அணுசக்தி முகாமை என்பதனைப் பார்ப்போம். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும், ஒரு சுயாதீனமான, அரசுகளுக்கு இடையிலான ஒன்றியமாக இந்த அமைப்பு செயல்படுகிறது. 1957 ஆம் ஆண்டு உரு வாக்கப்பட்ட இந்த அமைப்பு அணுசக்தித் தொழில்நுட்பத்தை சமாதான நோக்கங்களுக்கு உபயோகப்படுத்துவதற்காக, விஞ்ஞானத் தொழில்நுட்பங்களைப்பாவிப்பதற்காக, நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்கானது. சமூகத்திற்கு அணுசக்தித் தொழில்நுட்பம் தரும் பயனை அதிகப்படுத்தவும், அதனோடு சமாதான நோக்கங்களுக்குத்தான் பாவிக்கப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்துவதற்குமான திட்டங்களை இந்த அமைப்பு செயல்படுத்துகிறது. அதாவது அணுசக்தி பாவனை தொடர்பான பாதுகாப்பு, பத்திரம், தொழில்நுட்பம், கண்காணித்தல் போன்றனவே இந்த அமைப்பு செயல்படும் தளம். இதனது இன்றைய பொது இயக்குனராக இருப்பவர் டாக்டர். மொஹமத் எல்பராடேய் என்பவராவார்.
இந்த அமைப்பின் செயல்பாடுகள் உச்சத்தை அடைந்த, வரலாற்றுத் திருப்பம் கொண்ட இரண்டு உலக அரசியல் நிகழ்வுகள் ஈராக்குடனும் ஈரானுடனும் சம்பந்தப்பட்டதாகும். சதாம் ஹுசைன் காலத்தில் பேரழிவு அணு ஆயுதங்கள் ஈராக்கில் இருக்கிறது எனும் அமெரிக்க-பிரித்தானியாவின் ‘குற்றச்சாட்டு ஆவணங்களின்’ அடிப்படையில், சர்வதேச அணுசக்தி முகாமை ஈராக்கின் அணுசக்தித் திட்டங்களைக் கண்காணிக்கவும், சோதனையிடவும் ஈராக்கினுள் வேட்டையாடித் திரிந்தது. பேரழிவு ஆயுதங்கள் இருக்கிறது என நிரூபிக்கப்படாத சூழலிலும், ஐக்கிய நாடுகளின் தீர்மானம் எதுவும் அற்ற நிலையிலேயே அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஈராக்கின் மீது போர் தொடுத்தது. தற்போது ஈரானின் மீதும் இதே வகையிலான ‘குற்றச்சாட்டு ஆவணங்களை’ அமெரிக்கா மின்பிம்ப வடிவத்தில் கொடுத்திருக்கிறது எனவும், அதன் அடிப்படையில் ஈரான் பேரழிவு அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறது எனும் சந்தேகத்தின் பெயரில், அந்த நாட்டின் அணுஉலைகளைச் சோதனையிடவும், கண்காணிக்கவும், வேட்டை நடத்தவும் தமக்கு அனுமதி தரவேண்டும் எனக் கோரி வருகிறது சர்வதேச அணுசக்தி முகாமைத்துவம். ஈரான் அவ்வாறான அணு ஆயுதம் எதனையும் தாம் தயாரிக்கவில்லை எனத் திரும்பத் திரும்பச் சொல்லி வரும் நிலையில், இவ்வகையிலான கண்காணிப்புக்கு ஈரான் இணங்கவில்லையானால் ஈரான் மீதும் ஈராக் போலவே போர் தொடுப்போம் என மிரட்டிவருகிறது அமெரிக்கா.
இந்தச் செயல்பாட்டுடன், அதனது 2008ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கையின்படி சர்வதேச அணுசக்தி முகாமை கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் பிற நாடுகளாக வடகொரியா, லிபியா, சிரியா போன்ற நாடுகள் இருக்கிறது. அதாவது ஈரான்,சிரியா,லிபியா போன்ற இஸ்லாமிய நாடுகள், வட கொரியா எனும் வைதீக கம்யூனிச நாடு தவிரப் பிற நாடுகள் எதிலும் அரசியல் நெருக்கடி இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகள் இல்லை. இந்த நாடுகளில் சர்வதேச அணுசக்தி முகாமை அமைப்பு செய்துவரும் நடவடிக்கைகளே மிக விரிவாக அதனது ஆண்டறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சர்வதேச அணுசக்தி முகாமைத்துவம் என்பது ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் கமிட்டி உறுப்பினர்களால் வழிநடத்தப்படும். ஒரு நாட்டுக்கும் சர்வதேச அணுசக்தி முகாமைத்துவத்திற்கும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு, அணுசக்தி முகாமையின் கமிட்டி அந்த நாடு ஒப்பந்தத்திற்கு இசைவாக நடந்துகொள்ளவில்லை எனத் தீர்மானித்தால், சம்பந்தப்பட்ட நாட்டின் அபிப்பிராயம் நிராகரிக்கப்பட்டு, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலுக்கு அணுசக்தி முகாமையின் கமிட்டி பரிந்துரை செய்யலாம். ஐக்கிய நாடுகள் சபையின் முடிவை ஒட்டி அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையும் எடுக்கலாம். ஐக்கிய நாடுகள் சபை ‘தவறு’ செய்கிறது எனத் தீர்மானித்தால், ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் பற்றிக் கவலைப்படாமலே அமெரிக்காவும் பிரித்தானியாவும் நினைத்தால் அந்த நாட்டின் மீது படையெடுக்கவும் செய்யலாம். ஈராக் விசயத்தில் இதுதான் நடந்தது. ஈரான் விசயத்திலும் அமெரிக்கா இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறது.
2007-2008ஆம் ஆண்டுக்கான அணுசக்தி முகாமையின் கமிட்டி உறுப்பினர்களாக 5 அணு ஆயுத நாடுகள் உள்ளிட்ட 35 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அணுஆயுத சோதனைகள் நடத்தியிருந்தாலும் அணு ஆயுத நாடுகள் என ‘அங்கீகரிக்கப்படாத’ இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளும் இந்தக் கமிட்டியில் அங்கத்துவம் வகிக்கின்றன.
இரண்டாவதாக, அணு ஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தம் (Treaty on the non-proliferation of Nuclear weapons – called as NPT : 1 July 1968) பற்றியும் நாம் அறிந்துகொள்வது பயனளிக்கும். இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அணு ஆயுதம் கொண்ட நாடுகள் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா போன்றன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா போன்றன கையொப்பமிடவில்லை. அணுஆயுதம் வைத்திருந்தாலும் அதனை அதிகாரபூர்வமாக வெளியிடாத நாடாகவும், இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத நாடாகவும் இஸ்ரேல் இருந்து வருகிறது. இன்றைய நிலையில் வடகொரியா தவிரவும், அணு ஆயதம் கொண்ட பிற நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் மீதான சர்வதேச அணுசக்தி முகாமைத்துவத்தின் கண்காணிப்பு என்பது ஒரு அரசியல் நெருக்கடியாக இல்லை என்பது இங்கு கவனம் கொள்ளத்தக்கது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு வகையிலானது. (அ) ஏற்கனவே அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் தம்மிடமுள்ள அணு ஆயுதங்களை மெல்ல மெல்லச் செயலிழக்கச் செய்வதன் வழியில், அவை இல்லாமல் செய்யப்படக்கூடிய நிலைமை நோக்கிச் செல்லவேண்டும். (ஆ) அணுஆயுதத் தொழில்நுட்பம் கொண்டிருக்கக் கூடிய நாடுகள் அது இல்லாத நாடுகளுக்குத் தயாரிப்புக்கான உதவிகள் எதனையும் செய்யக் கூடாது. அதே போல அணு ஆயுதத் தயாரிப்பின் செயல்போக்கிலுள்ள நாடுகளிடமிருந்து எந்த உதவியையும் தொடர்புகளையும் இந்த நாடுகள் பெற்றுக்கொள்ளக் கூடாது. இங்கு வலியுறுத்திச் சொல்லவேண்டிய முக்கியமான விசயம், உலகின் மிக அதிகமான அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக முதலிடத்தில் ரஷ்யா இருக்க, இரண்டாமிடத்தில் அமெரிக்கா இருக்கிறது எனும் ஆயுதத்தரவுதான்.
இந்த அணுப் பரவல் எதிர்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூன்று முக்கியமான அம்சங்கள் இவைதான். (1) அணு ஆயுதப் பரவல் தடுப்பு. (2) அணு ஆயுதத்தை இல்லாதொழிப்பது. (3) அணு சக்தித் தொழில்நுட்பத்தை சமாதான காரியங்களுக்காகப் பாவிப்பது. இந்த மூன்றில் முதல் இரண்டு சரத்துகளை முற்றிலும் காற்றில் பறக்கவிட்டனவாகவே அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகள் இருக்கின்றன. ஈராக் யுத்த தருணத்தில் அமெரிக்கா பதுங்கு குழிகளை அழிக்கக் கூடிய அணுகுண்டுச் சோதனைகளைச் செய்திருக்கிறது. தம்மிடமுள்ள அணு ஆயதங்களை அழிப்பதில் எந்த அணு ஆயுத வல்லரசும் ஈடுபடவில்லை. ஆனால் மூன்றாவது சரத்தான அணுசக்தியை சமாதான காரியங்களுக்குப் பாவிப்பது என்பதனை மட்டும் இந்த அணு ஆயுத வல்லரசுகளும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுமான சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உலகின் பிற நாடுகள் மீது ‘அசமத்துமாக’ச் சுமத்தி வருகிறது.
இந்த அசமத்துவ நிலைமைக்கு எதிராகவும், தமது இறையாண்மையின் பொருட்டும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்திருக்கும் இந்தியா, தற்போது இதே நிலைமைகளைப் புழக்கடை வழியில் இந்தியாவின் மீது சுமத்தவிருக்கும் சர்வதேச அணுசக்தி முகாமையினதும், அமெரிக்காவினதும் ஒப்பந்தங்களை எவ்வாறு ஒப்புக்கொள்வது சரியாக இருக்கும் என்கிற ‘காலம் கருதிய’ கேள்வியைத்தான் கம்யூனிஸ்ட்டுகள் கேட்கிறார்கள். இந்த ஒப்பந்தங்களில் ஈடுபட்டால் ஈரானின் நிலை இந்தியாவுக்கும் காத்திருக்கிறது எனும் எச்சரிக்கையைத்தான் கம்யூனிஸ்ட்டுகள் நாட்டு மக்களுக்கு முன் அறைகூவலாக முன்வைக்கிறார்கள்.
III
சர்வதேச அணுசக்தி முகாமைத்துவத்திற்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்த விவரங்கள் தொடர்பாக கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சேபணை என்ன?
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால், (அ) வெகுமக்களின் பாவனைக்கான அணுசக்தித் தொழில்நுட்பம் அல்லது சமாதான நோக்கிலான (peacefull or civilian use) தொழில்நுட்பம் மற்றும் அரசியல் தந்திரோபாய அல்லது ராணுவப் பாவனைக்கான (strategic or military) அணுசக்தித் தொழில்நுட்பம் இவற்றுக்கிடையிலான வித்தியாசங்களைத் தெரிந்துகொள்வதும், இதில் எந்தத் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த அல்லது எந்தத் தொழில்நுட்பத்திற்கு உதவ அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகளும் சர்வதேச அணுசக்தி முகாமையும் விரும்புகின்றன எனவும் புரிந்துகொள்வது மிக மிக முக்கியமானது. (ஆ) இந்த இரண்டு வித்தியாசமான அணுசக்தி பாவனைக்கு இடையில் அணுசக்திக்குத் தேவையான ‘அடிப்படை மூலாதாரங்கள்’ என்ன, அவற்றின் பாவனைகள் என்ன, அவை அடையும் மாற்றங்கள் என்ன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முதலாவதாக உணவுப் பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம். புற்றுநோய்த் தடுப்புத் தொழில்நுட்பம், மின்சாரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தில் அணுசக்தி பாவிக்கப்படுவதில், அணுசக்தி ஆயுதங்கள் கொண்ட 5 நாடுகளுக்கோ அல்லது சர்வதேச அணுசக்தி முகாமைக்கோ எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், சமாதான நோக்குக்கான பாவனையின் போக்கில், இருவகையிலும் பயன்படுத்தக்கூடிய (dual purpose), அதாவது சமாதான நோக்கிற்கும் அதே வேளை தந்திரோபாய அல்லது ராணுவ நோக்கிற்கும் பயன்படுத்தக்கூடியதான சாத்தியமுள்ள அணுசக்திச் செயல்பாடுகளில் ஈடுபடுவதுதான் அணுசக்தி ஆயுதங்கள் கொண்ட 5 நாடுகளுக்கும் அல்லது சர்வதேச அணுசக்தி முகாமைக்கும் ஆட்சேபணை உள்ள பிரதேசமாகிறது.
ஆக, அணுசக்தி பாவனையை, தெளிவான வார்த்தைகளில் சொல்வதானால், அரசியல் தந்திரோபாயம் அல்லது ராணுவ நோக்குக்கு பாவிக்க விடாமல் தடுப்பதுதான் ‘அவர்களது’ உள்ளுறைந்த நோக்கம் என்பது தெளிவாக இருக்கிறது. அதனை நேரடியாகவே இந்த அணுசக்தி ஆயுத நாடுகள் செய்யலாம் தானே, அணுசக்தி உலைகளையும் கொடுத்துவிட்டு, அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தையும் கொடுத்துவிட்டு எதற்காக ‘இந்த’ நாடுகளிடம் மாய்ந்து மாய்ந்து ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருக்க வேண்டும்?
ஏனெனில், சமாதான நோக்கத்திற்காக பாவிக்கப்படும் அணுசக்தித் தொழில்நுட்பத்தை, ரகசியமாக ராணுவ ரீதியிலான அல்லது அணுக்குண்டு தயாரிப்புக்கானதாகவும் ‘எந்தச் சந்தர்ப்பத்திலும்’ மாற்ற முடியும் என்பதுதான் இந்தத் தொழில்நுட்பத்திலுள்ள சாத்தியமான ‘ஆபத்து’ என அணு ஆயுத வல்லரசுகள் கருதுகின்றன. அது அணுசக்தி ஒரு விஞ்ஞானத் தொழல்நுட்பம் எனும் அளவில் நிஜமானது. இந்த ‘ஆபத்தை’ முன்வைத்து, ஒரு புறம் அணு ஆயுத வல்லரசுகளாக உலகின் வளங்கள் மீதான தமது அரசியல் அதிகாரத்தையும் காத்துக்கொள்ள வேண்டும், அதேவேளை ‘நிஜமாகவே’ இருக்கிற அணுக்கசிவு ஆபத்து மற்றும் விபத்து போன்றவற்றைத் தடுக்கும் வழி வகைகளை அணுசக்தியை மின்சார உற்பத்தி மற்றும் ஆக்க விளைவுகளுக்குப் பாவிக்கும் நாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படையில்தான் அணுஆயுதப் பரவல் ஒப்பந்தம், சர்வதேச முகாமைத்துவக் கண்காணிப்பு, அமெரிக்க அணுசக்திச் சட்டமான 123 போன்றவை செயல்படுகின்றன.
இரண்டாவதாக, சமாதான நோக்கத்திற்கு அல்லது ஆக்க விளைவுகளுக்கு பாவிக்கப்படும் அணுசக்தித் திட்டங்கள், அதனது செயல் போக்கில் எந்தத் தொழில் நுட்பத்தை ‘வளர்ப்பதின் மூலம்’ அல்லது ‘எந்தச் சந்தர்ப்பத்தில் அதனை மடைமாற்றுவதன் மூலம்’ அணு ஆயுதத் தயாரிப்புக்குத் திருப்ப முடியும் என்பதனைப் பார்க்க வேண்டும்.
அணுசக்தியை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவைகள் இரண்டு. ஒன்று பாதுகாப்பான அணுசக்தி உலைகள். இரண்டாவது எரிபொருள். பிரதானமான எரிபொருள் யுரேனியம். யுரேனியத்தாது அணுசக்தி உருவாக்குவதற்குத் தேவையான அளவு இந்திய இயற்கை வளங்களுக்கு உட்பட்டு இல்லை. இந்த இரண்டினையும் அமெரிக்காவிடமிருந்தும், அமெரிக்க அனுசரணையிலுள்ள விநியோக நாடுகளிடமிருந்தும் பெறவேண்டும். இதனைக் கொண்டு அணுசக்தியின் மூலம் மின்சாரத்தை உருவாக்க முடியும். உணவு உற்பத்தி, புற்றுநோய்த் தடுப்பு போன்றவற்றிலும் இதனை உபயோகிக்கமுடியும். இந்தக் கட்டம் வரை உதவி வழங்குவதில் அணு ஆயுத நாடுகளுக்கோ அல்லது சர்வதேச அணுசக்தி முகாமைக்கோ ஆட்சேபணையில்லை. ஆனால், அடிப்படையான இந்தத் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு, பாவிக்கப்பட்ட யுரேனியம் எரிபொருளை மீளவும் பாவிப்பதற்குத் தயார்ப்படுத்தும் தொழில் நுட்பத்திற்கோ, யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கோ, கனநீர் உற்பத்தி செய்வதற்கோ ஆன செயல்பாட்டுக்கு ‘இவர்கள்’ அனுமதிப்பதில்லை என்பதும், அது தொடர்பான உற்பத்திக் கலன்களையும் தொழில்நுட்பத்தையும் வழங்குவதில்லை என்பதும், அப்படியான உற்பத்தியில் ஈடுபடாமல் தடுப்பதற்கான கண்காணிப்பு அமைவை உருவாக்குவதும் தான் சர்வதேச அணுசக்தி முகாமைத்துவத்தின் திட்டம்.
பயன்படுத்திய அணுசக்தி எரிபொருளை சுழற்சிமுறையில் மீளவும் உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் தற்போது ஜெர்மனி, ஜப்பான் டென்மார்க் போன்ற நாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அணு சக்தி ஆயுத நாடுகள் உட்பட 10 பேருக்கு மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘உங்கள் பாதுகாப்பு என்றாலும் அணு ஆயதத்தை உற்பத்தி செய்யக் கூடாது. நாங்கள் சொல்கிற அரசியலுக்கு நீங்கள் தலையாட்ட வேண்டும்’ என்பதனைத்தான் ‘அவர்கள்’ சர்வ தேசிய ஒப்பந்தங்கள், பாதுகாப்பு, பத்திரம் எனும் பாஷையில் சொல்கிறார்கள். இதனை மீறிச் செய்தால் பொருளாதாரத்தடை, படையெடுப்பு போன்றவற்றையெல்லாம் செய்வோம் என்பதற்கான முன்னேற்பாடுதான், நாடுகளை இந்த ஒப்பந்தத்தில் ‘சிக்கவைப்பதற்கென’ இத்தகைய ஒப்பந்தங்கள் எனப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை.
ஐக்கிய நாடுகள் சபையினையும் சரி, சர்வதேச அணுசக்தி முகாமைத்துவத்தினையும் சரி, எந்த நேரத்திலும் நிராகரிக்கக்கூடிய ‘ஏற்பாடுகளை’ எல்லாக் கட்டத்திலும் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை நிர்வாகத்திற்கும் சரி, சர்வதேசிய அணுசக்தி முகாமை நிர்வாகத்திற்கும் சரி, நிர்வாகச் செலவுகளை வழங்குகிற பிரதானமான நாடுகள் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தான் என்பதனைக் கவனத்தில் கொண்டால், அணு ஆயுதம் கொண்டிராத நாடுகளில், இவ்விரண்டு அமைப்புகளும் கொண்டிருக்கும் அதிகாரத்தை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்.
இடதுசாரிகள் இச்சூழலில் இரண்டு கேள்விகளை முன்வைக்கிறார்கள் : சர்வ தேச அணுசக்தி முகாமையுடனான ஒப்பந்தத்தில் இந்தியாவின் தந்திரோபாய அணுசக்தித் திட்டங்களைக் காத்துக் கொள்வதற்கான உரிமையைத் தக்கவைப்பதற்கான குறிப்பான ஏற்பாடுகள் ஏதேனும் இருக்கிறதா? சர்வதேச அணுசக்தி முகாமை ‘இந்தியா ஒப்புதலின்படி நடக்கவில்லை’ எனக் காரணம் காட்டி, இந்தியாவின் எல்லா அணுசக்தித் திட்டங்களையும் கண்காணிக்கும் உரிமையைத் தானும், தான் விரும்பும் பிறநாடுகளும் (ஈராக் விசயத்தில் அமெரிக்கக் கண்காணிப்பாளர்களும் பேரழிவு ஆயுதங்களைக் கண்டுபிடிக்க ஈராக்கினுள் அலைந்தார்கள்) கண்காணிக்கக் கோரினால், இந்தியாவின் பூர்வீகமான அணு சக்தித் திட்டங்கள் உள்பட கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா அனுமதிக்கப் போகிறதா அல்லது இந்திய உரிமையையும் இறையாண்மையையும் காப்பாற்றிக்கொள்ள நிபந்தனையான சரத்துகள் ஏதேனும் ஒப்பந்தத்தில் இருக்கிறதா?
இந்த மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பான, இந்திய இறையாண்மையைக் காக்கும் எந்தத் திட்டவட்டமான சரத்துகளும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை என்பதனையும், அது தொடர்பான வாசகங்கள் குழப்பங்களின் அடிப்படையிலும், வியாக்கியானத்திற்கு உட்பட்ட வகையிலும் இருக்கின்றன என்பதையும்தான் கம்யூனிஸ்ட்டுகள் சுட்டிக்காட்டுகிறார்கள். சீனா உள்பட அனைத்து அணு ஆயுத நாடுகளும் தமது பாதுகாப்புக்கோ தமது இறையாண்மைக்கோ அச்சுறுத்தல் வருமானால் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தினின்றும் வெளியேறுவதற்கான ஒரு ‘இடத்தை’ தமக்குச் சாதகமாக எப்போதுமே கொண்டிருக்கின்றன. குறிப்பாக, நேட்டோ நாடுகளின் நிலைப்பாட்டையும் அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் நாம் பார்க்க வேண்டும். சர்வதேச அணுசக்தி முகாமையுடனான ஒப்பந்தம் அல்லது அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இவைகளில் கையொப்பமிட்ட ஒரு நாடு, இவைகளைக் கடைப்பிடிக்கவில்லையென்றாலோ, சம்பந்தப்பட்ட அமைப்புகள் தமக்குகந்த கண் காணிப்புகளையோ சோதனைகளையோ செய்ய முடியவில்லை என்றாலோ அமெரிக்க நிர்வாகமும் நேட்டோ நாடுகளும் அந்தக் குறிப்பிட்ட பிரச்சினைக்குரிய நாட்டில் நேரடியாகவே தலையிடும். ஈராக் அதற்கான மிகச் சிறந்த நடைமுறை உதாரணமாக இருக்கிறது.
பிரதானமாக, அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தின்படி அணு ஆயதங்களைக் கொண்டிருக்கும் நாடுகள், தாங்கள் விரும்பினால் தங்களது எந்த அணுசக்தித் திட்டங்களையும் சர்வதேச அணு சக்தி முகாமையின் கண்காணிப்பிலிருந்தும் பாதுகாப்பிலிருந்தும் விலக்கிக் கொள்ள முடியும். அணு உலைகள் சம்பந்தமான இந்த உரிமை சர்வதேச அணுசக்தி முகாமையுடனான ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு இல்லை என்பதனை இடதுசாரிகள் திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி, காங்கிரஸ் அரசிற்கு முன்னால் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விளக்கம் தருமாறு சில கேள்விகளை இடதுசாரிகள் முன்வைத்தார்கள்.
1.அமெரிக்கா அல்லது அணுசக்தி விநியோகக்குழுவின் கருத்து மாறுபாட்டினால் இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளுக்கான விநியோகம் நின்று போனால், சர்வதேச அணுமுகாமையின் பாதுகாப்பிலிருந்து ‘அவர்களது’ அணு உலைகளை விலக்கிக்கொள்ள இந்தியாவால் முடியுமா? 2. அமெரிக்கா அல்லது அணுசக்தி விநியோகக்குழுவின் கருத்து மாறுபாட்டினால் இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகளுக்கான விநியோகம் நின்றுபோனால், சர்வதேச அணு முகாமையின் பாதுகாப்பிலிருந்து ‘நமது’ அணுஉலைகளை விலக்கிக் கொள்ள இந்தியாவால் முடியுமா? 3.அணுசக்தி எரிபொருள் உத்திரவாதங்கள் செயல்படாமல் போனால், நாம் ‘நமது’ பிற பாதுகாக்கப்படாத அணுசக்தித் திட்டங்களிலிருந்து அணுசக்தி எரிபொருள்களை நாம் பெற இயலுமா? அதாவது அப்படியான சூழலில் அந்த அணு உலைகளை நாம் திரும்பவும் எடுத்துக் கொள்ள முடியுமா? 4.அமெரிக்க மற்றும் அணுசக்தி எரிபொருள் விநியோகம் தடைப்படுமானால் அதனை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் இந்தியா சார்பில் என்ன இருக்கிறது? 5.அத்தகைய நிவர்த்தி ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் என்ன?
சர்வதேச அணுசக்தி முகாமையுடனான ஒப்பந்தத்தில் இந்தக் கேள்விகள் அனைத்தும் பதில் காணாமல் விடப்பட்டுள்ளது. ‘குறிப்பிட்டுச்’ சொல்லப்படாத இந்த நிவர்த்தி ஏற்பாடுகள் என்பது தீர்வு காணப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்த விசயங்களில் ஜப்பான் போலவோ அல்லது சீனா போலவோ எந்தவிதமான ‘குறிப்பான சிறப்புரிமைகளும்’ இந்தியாவிற்கு இல்லை. இந்தவகையில் பிரதமர் பாராளுமன்றத்தில் கொடுத்த உறுதி மொழிகளும், ஒப்பந்த விவரங்களும் முற்றிலுமாக முரண்படுகிறது என இடதுசாரிகள் முன் வைக்கிறார்கள்.
இதுவன்றி, 2006ஆம் ஆண்டு ‘அமெரிக்க ஹைடு சட்டத்திற்கும் 123 ஒப்பந்தத்திற்கும் இடையிலான ‘பிரதான முரண்பாடு’ குறித்து சர்வதேச முகாமையுடனான இந்திய ஒப்பந்தம் எதனையும் சொல்வதில்லை. அமெரிக்க வெளி விவகாரக் கொள்கையின் அடிப்படையில் நமது அணு உலைகளையும் திட்டங்களையும் அடகு வைப்பதான ஒரு நிலைப்பாடே தற்போது உள்ளது. சர்வதேச அணு முகாமையுடனான ஒப்பந்த வரைவுகளும் சரி, 123 ஒப்பந்த வரைவுகளும் சரி இதனையே தெளிவுபடுத்துகின்றன. இவ்வகையில் இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்துக்கும் இந்திய நலன்களுக்கும் இந்த ஒப்பந்தங்கள் விரோதமாக இருக்கின்றன என இடதுசாரிகள் சொல்கிறார்கள்.
அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சேபணை என்ன? 123 அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த சரத்துகளுக்கும், அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கும் உள்பட்ட ஹைடு சட்டத்திற்கும் உள்ள உறவு எத்தகையதாக இருக்கப் போகிறது என்பதுதான் பிரச்சினைக்குரிய அம்சமாகும், ஹைடு சட்டம் 2006ஆம் வருடம் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கச் சட்டமாகும். இந்தியாவுடனான அமெரிக்க ஒப்பந்தம் இந்த ஹைடு சட்டத்திற்கு உள்பட்டுத்தான் வரும் என அமெரிக்க ராஜாங்க அமைச்சரும் ஜார்ஜ் புஷ்ஷின் சர்வதேச ஆலோசகருமான கண்டலிசாரைஸ் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ஹைடு சட்டத்திற்கு மாற்றாக இந்தியா செயல்படுமானால் அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு எதிரான அனைத்தையும் செய்ய முடியும் என்பதுதான் அந்தத் திட்டவட்டமான கருத்தாகும். அமெரிக்க அரசின் பல பிரதிநிதிகளும் செனட்சபை உறுப்பினர்களும் அதனைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். அதாவது, தமக்கு விருப்பமில்லாத வகையில் இந்தியா செயல்படுமானால், ஈரான் விசயத்தில் நடந்துகொண்டதைப் போல, இந்திய விஷயத்திலும் அமெரிக்கா நடந்து கொள்ளும். பிரணாப்முகர்ஜி இப்போது இது பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ஹைடு சட்டம் தம்முடைய 123 ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்த முடியாது என அவர் சொல்லி வருகிறார். ஆனால், அமெரிக்கத் தரப்பிலிருந்து இந்திய அரசின் வியாக்கியானத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் ‘அவர்கள்’ சொல்லி வருகிறார்கள்.
ஹைடு சட்டத்தின்படி அமெரிக்க ஜனாதிபதி செயல்படுவாரானால், பொக்ரான் அணுசக்தி குண்டு சோதனையின் பின்பு ஏற்பட்டது போல, அமெரிக்க உதவிகள் நிறுத்தப்படுவது மட்டுமல்ல, எந்தவிதமான சர்வதேசிய ஒப்பந்தமும் ஏற்படுவதற்கு முன்னாலேயே இந்தியாவில் இயங்கி வரும் அணுசக்தி தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளிலும் அமெரிக்கா தலையிடும், சர்வதேச அணுசக்தி முகாமை நம்மைக் கண்காணிக்கும். இந்தியா வியாக்கியானப்படுத்துகிறபடி வெகுமக்கள் பாவனைக்கான அணுசக்தித் திட்டங்களுக்கும் அரசியல் தந்திரோபாய ரீதியிலான ராணுவ அணுசக்தித் திட்டங்களுக்கும் இடையிலான வித்தியாசப்படுத்தலை அமெரிக்க அரசு செய்யவில்லை.
IV
அமெரிக்க வாழ் இந்தியர்கள் இரண்டு வகையில் தற்போது அமெரிக்க ஆதரவு அரசியலை ஊடகங்களில் முன்வைத்து வருகிறார்கள். உலக அளவிலான இஸ்லாமியர்களின் பாலான அமெரிக்க அரசியலை அவர்கள் நியாயப்படுத்தி, இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான அரசியலை ஆமோதித்து நிற்கிறார்கள். அமெரிக்கா ‘தமது குடிமகன்’ எனும் அடிப்படையில் ‘தேசபக்தியை’ வளர்த்து வருகிறது. 'அண்டை வீட்டுக்காரன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நான் சுகமாக இருந்தால் போதும்’ எனும் மனப்பான்மை இது. இதே விதமாகவே அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்திய அரசியல் தொடர்பாகவும் ஒரு நிலைப்பாட்டை சமீப காலங்களில் மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, ‘இந்திய தேசபக்தனாக இருங்கள். அண்டை வீட்டுக்காரன் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை. முடிந்தால் உமக்குச் சரிவரவில்லையானால் அவனை அழித்துவிடுங்கள்’ என்பது அவர்களது நிலைப்பாடு. இந்த மனப்பான்மை ஒரு அறிவு இயக்கமாகவே தமிழில் இப்போது வளர்ந்து வருகிறது.
இவர்களில் பலர் முன்னாள் இடதுசாரிகள். இன்னாள் இஸ்லாமிய மற்றும் மார்க்சிய வெறுப்பாளர்கள். இவ்வகையிலான அறிவுஜீவிகளுக்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு அமெரிக்கவாழ் இந்தியரான கோபால் ராஜாராம் எனும் சிறுபத்திரிகைச் சூழல் சார்ந்த எழுத்தாளர். இப்படித் தமது நிலைப்பாடுகளைத் தலைகீழாக மாற்றிக்கொண்டவர்களுக்கு உலக அளவிலான எடுத்துக்காட்டு கிறிஸ்தோபர் ஹிச்சின்ஸ். சோசலிசத்தின் பின்னடைவு, அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கம் அவர்களை இந்தப் பாதையில் கொண்டு சேர்த்திருக்கிறது. தமிழக எழுத்தாளரான ஜெயகாந்தனை முன்வைத்து இந்த அறிவுஜீவிதப் போக்கு, தமிழில் ஒரு எழுத்தியக்கமாகவே ஆகி வருகிறது. அதனது வீரர்களின் பட்டியல் நீண்டது. எனினும் அது இங்கு அவசியமில்லை.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஒரு கட்டுரையை வாசித்தபோது (வார்த்தை : ஜூலை 2000) ஆர்.எஸ்.எஸ்.காரரின் கட்டுரையைத்தான் படித்துக் கொண்டிருக்கிறோமா என்றே முதலில் நினைக்க வேண்டியிருந்தது. பிற்பாடுதான் அது நண்பர் கோபால் ராஜாராம் எழுதிய கட்டுரை என ஞாபகம் வந்தது. இன்றைய சூழலில் கட்டுரையின் தலைப்புத்தான் எவ்வளவு வக்கிரமானது பாருங்கள் : ‘தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின்’. என்ன அழகான தமிழ்! என்ன வக்கிரமான சூழல்! அதாவது, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்ளாதவர்கள் இந்திய தேசத்தின் எதிரிகளாம். ‘அவர்கள்’ இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியமில்லையாம். என்ன ‘அறிவுபூர்வமான’ தெளிவான பார்வை என ஆச்சரியப்பட்டுப் போனேன். நண்பர் கோபால் ராஜாராம் அமெரிக்காவிலிருக்கிற நோம் சாம்ஸ்க்கி பற்றியெல்லாம் மேற்கோளிடுகிறார். ஏன் அவர் கண்ட லிசா ரைசும், அமெரிக்க அதிகாரிகளும் செனட் உறுப்பினர்களும், ஹைடு ஒப்பந்தமும் சொல்வதையும் குறித்து மேற் கோளிடக் கூடாது? ஹைடு சட்டத்தின் கீழ்தான் 123 ஒப்பந்தம் வரும் என்கிறார்கள் அமெரிக்கர்கள். ஜனாதிபதி நினைத்தால் எல்லா ஒப்பந்தத்தையும் காற்றில் விடலாம் என்பதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிற சர்வதேசிய அரசியல் யதார்த்தம். பிரணாப் முகர்ஜி அமெரிக்கர்கள் சொல்கிற மாதிரி அப்படியெல்லாம் இல்லை என்கிறார். ஹைடு சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்கிறார். அமெரிக்க நேர்மையின் மீது பிரணாப் முகர்ஜிக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச சந்தேகம்கூட நண்பர் கோபால் ராஜாராமுக்கு இல்லை என்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தத்தக்கது.
கோபால் ராஜாராமின் கட்டுரை மிக வெளிப்படையான ஒரு அரசியல் கட்டுரை. இடதுசாரிகளுக்கு எதிரான, இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஒரு கட்டுரை. இடதுசாரிகள் இந்த ஒப்பந்தத்தினை எதிர்ப்பதற்கான காரணம் அவர்கள் சீனாவைப் பாதுகாத்து நிற்கத்தான் என்கிறார் அவர். இஸ்லாமிய மக்கள் ஒரு மக்கள் கூட்டமெனும் அளவில் வெளிப்படையாக இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும், அதன் மூலம் ‘அவர்கள்’ தங்களது தேசபக்தியினைத் தெரிவிக்க வேண்டும் என்கிறார் அவர். அணுசக்தி ஒப்பந்தத்தையொட்டி கண்ட லிசா ரைசும் அமெரிக்க அரசதிகாரிகளும் செனட் உறுப்பினர்களும் பேசுவதற்கும், கோபால் ராஜாராம் பேசுவதற்கும் வித்தியாசமில்லை. இந்தியாவுடனான அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்பது, பாரிய அழிவு ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க யுத்தத்தில் இந்தியாவை ஆதரவு சக்தியாக நிற்கவைப்பதற்கு ஆனதுதான் என்பதைத் தெளிவாக அவர்கள் சொல்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதன் வழி, தமது தேசபக்தியை இந்திய இஸ்லாமியர்கள் வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்கிறார் கோபால் ராஜாராம்.
உலகின் எண்ணெய் வளம், எரிவாயு வளம் போன்றவற்றில் தமது நுகர்வுக்கான அதிகாரத்தை எவரும் பங்கு போட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, அமெரிக்கா பிற நாடுகளை அணுசக்தி மூலம் மின்சார உற்பத்தியிலும் பிற தொழில் நுட்பங்களிலும் ஈடுபடுமாறு கோருகிறது. ஈராக் யுத்தம் ஜனநாயகத்திற்கு ஆனது இல்லை, அது எண்ணெய் வள ஆதிக்கத்திற்கு ஆனது. எரிபொருட்கள் மற்றும் இயற்கை வளங்களின் மீதான தமது ஆதிக்கம், அதனோடு உலகில் தமது அரசியல் அதிகாரத்திற்கான நோக்கம் போன்றவற்றின் அடிப்படையில்தான், அமெரிக்கா அணுசக்தி தொடர்பான ஒப்பந்தச் சரத்துகளை உருவாக்குகிறது. தமது அரசியல் நகர்வுகளையும் மேற்கொள்கிறது என்பதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.
‘எதுவொன்றாயினும்’ அமெரிக்க ‘தேசிய நலனுக்கு’ எதிரானது என அவர்கள் கருதுவார்களானால், அவர்கள் எந்த உலக அமைப்பினையும் மீறிச் செயல்படுவார்கள். எந்த ஒப்பந்தத்தினையும் அவர்களாகவே நிராகரிப்பார்கள். இந்தச் சூழ்நிலையில் தமது நலன்களுக்கு உகந்த அளவில் ஜப்பானும் சீனாவும் ‘முன்ஜாக்கிரதையுடன்’ அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன. அந்த அளவு இந்திய நலன்களைக் காத்துக்கொள்ளுமாறான ஒப்பந்தங்களை இந்தியா அமெரிக்காவுடனோ அல்லது சர்வதேச அணுசக்தி முகாமையுடனோ மேற்கொள்ளவில்லை என்கிறார்கள் இடதுசாரிகள். இந்த நிலைப்பாடு அமெரிக்க உலக ஆதிக்கங்களின்; ‘ஏவலாளாக’ இந்தியாவை நிறுத்திவிடும் என எச்சரிக்கிறார்கள் இடதுசாரிகள். இந்திய மக்களின் உரிமைகளையும் அவர்கள் காத்து நிற்கிறார்கள். அதேவேளை, உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாகவும் அவர்கள் நிற்கிறார்கள். அரசியல் ரீதியில் உலக அளவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அமெரிக்காவை ஆதரிக்கிற தேசபக்தர்கள்தான் இந்திய அளவிலும் இதே காரணங்களுக்காக இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கிறார்கள்.
இரண்டு தெளிவுபடுத்த வேண்டிய விசயங்கள் பின்வருவன : முதலாவதாக, அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் அரசியல் ரீதியிலான சார்பு நிலையைக் காட்டிலும், சீனாவுடனும் வியட்நாமுடனும் ரஷ்யாவுடனும் கியூபாவுடனுமான இந்தியச் சார்பு நிலைக்காகவே இடதுசாரிகள் நிற்பார்கள். நிற்க வேண்டும். சோசலிசத்தின் பின்னடைவிலிருந்து பாடம் கற்ற ஒரு அரசியலை இவர்கள் சோதனைபூர்வமாக மேற்கொள்கிறார்கள். இவர்களில் எவரும் அமெரிக்கக் கைப்பொம்மைகளாகத் தமது உரிமையை விட்டுக் கொடுப்பவர்களாக, தமது இறையாண்மையை விட்டுக் கொடுப்பவர்களாக இல்லை. இந்தியா இவர்களுடன் நிற்க வேண்டும் எனக்கருதுவதில் என்ன தவறு இருக்க முடியும்? ஜனநாயகத்தை ஏற்றமதி செய்வது எனும் அடிப்படையிலும், பயங்கரவாதத்தை ஒடுக்குவது எனும் அடிப்படையிலும் உலகின் சகலவிதமான முரண்பாடுகளையும் இல்லாததாக்கி சிறுபான்மை மக்களை ஒடுக்குவதை ஒரு அரசியலாக்கி வருகிறது அமெரிக்கா. இந்த வகையில் இந்தக் கொடுமைகளுக்குத் தமது நாட்டின் மக்கள் துணை போகக் கூடாது என இடதுசாரிகள் நினைப்பதில் என்ன தவறு?
இரண்டாவதாக, கம்யூனிஸ்ட்டுகளின் இந்திய தேசபக்தி பற்றி சந்தேகத்தை எழுப்புகிறார்கள். தேசபக்தி இரு வகையிலானது. ஒன்று, தேசம் செய்கிற சகல அவச்செயல்களையும் பெருமிதத்துடன் காத்து நிற்பது. இது பிற்போக்குவாதிகளின், பழமை வெறியர்களின், அடிப்படைவாதிகளின் தேசபக்தி. இன்னொரு வகையிலான தேசபக்தி உண்டு. அது தனது நாடு செய்கிற அவச்செயல்களுக்கு வெட்கமுற்று, அவமானமுற்று தனது நாட்டை இடதுதிசையில் பயணிக்கச் செய்யும் தேச பக்தி. இத்தகைய தேசபக்தர்கள்தான் தமது நாடு குறித்தும் உலகின் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் குறித்தும் ஒருசேரக் கவலைப்படுபவர்கள். இவ்வகையிலான அமெரிக்க தேசபக்தர் நோம் சோம்ஸ்க்கி எனில், இதே வகையிலான இந்திய தேசபக்தர்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத்தும் ஏ.பி பரதனும் என, பிஜேபி ரக தேச பக்தர்கள் புரிந்துகொள்வது நல்லது. இவர்களைப் போன்ற தேசபக்தர்கள்தான் இடதுசாரிகளின் பின் அணிதிரண்டிருக்கும் விஞ்ஞானிகளான டாக்டர். எம். ஆர்.சீனிவாசன் முதல் ஏ.என்.பிரசாத் வரையிலானவர்களும் எனப் புரிந்து கொள்வது அதனினும் சாலச் சிறந்தது.
நடந்துகொண்டிருக்கும் விவாதங்களில் மறந்துபோன விவாதம் ஒன்று உண்டு. அது அடிப்படையில் அணுசக்தியைப் பாவிக்கலாமா, கூடாதா எனும் விவாதம். நோம்சாம்ஸ்கிக்கும் மார்க்சியர்களுக்கும் மட்டுமல்ல, இந்திய அணுசக்தி எதிர்ப்பாளர்களுக்கும் மார்க்சியர்களுக்கும் இடையில் நடைபெற்றே தீர வேண்டிய உரையாடல் இது. செர்னோபில், கல்பாக்கம், அணுசக்தியின் பாதுகாப்பு, அதன் எதிர்காலத் தேவை என அனைத்தையும் தழுவி நடந்தே தீர வேண்டிய உரையாடல் இது.
இன்று எழுந்திருப்பது, அரசியலும் ஆதிக்கமும் இறையாண்மையும் பற்றிய விவாதம். இதில் நாம் எந்தப் பக்கம் என்பதுதான் இன்று நம்முன் உள்ள பிரமாண்டமான கேள்வி. இதில் நாம் நிச்சயமாக இடதுசாரிகளின் பக்கம் நிற்க வேண்டியது நமது வரலாற்றுக் கடமை. கம்யூனிஸ்ட்டுகளின் பக்கம் நாம் என உரத்துச் சொல்ல வேண்டிய வரலாற்றுத் தருணத்தில் நாம் இருக்கிறோம்.
கம்யூனிஸ்ட்டுகளே, இடதுசாரித் தோழர்களே, உமது தெளிவும் தீர்க்கமுமான அரசியல் நிலைப்பாட்டுக்கு எமது லால் ஸலாம்.
ஆதாரங்கள் :
1. Hyde Act and Neclear Scientist note : The Hindu : 16 December 2006 by Dr. H.N. Sethna, former Chairman, Atomic Energy Commission : Dr. M.R. Srinivasan, former Chairman, Atomic Energy Commission : Dr. P.K. Iyengar, former Chairman, Atomic Energy Commission : Dr. A. Gopalakrishnan, former Chairman, Atomic Energy Regulatory Board : Dr. A.N.Prasad, former Director, Bhabha Atomic Research Centre : Dr. Y.S.R. Prasad, former Chairman&Managing Director, Nuclear Power Corporation of India Limited : Dr. Placid Rodriguez, former Director, Indira Gandhi Centre for Atomic Research
2. Hiding behind Hyde : T. R. Andhyarujina : Senior advocate, Supreme Court and a former Solicitor-General of India : Indian Express.com : 1 September 2007
3. International Atomic Energy Agency (IAEA) Annual Report for the period of 2007 : Vienna : Austria : 2 June 2008
4.CPI(M) Stand : The Indo US Nuclear Deal: Changes Not Acceptable : 23 July 2006
5.The Left Parties Statement: Betrayal of Public Commitment : 10 July 2008
6. On the IAEA Safeguards Agreement : Why the Text was Hidden till Submission to the IAEA? : cpim.org
7.தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின்: கோபால் ராஜாராம் : வார்த்தை : தமிழ்நாடு : ஜூலை ௨00௮


நன்றி-யமுனா ராஜேந்திரன் -உயிர்ம்மை

Saturday, 16 August 2008

ஆகஸ்ட் 15


இந்திய தேசிய சுதந்திர தினம்.
நம்மில் அநேகருக்கு நாட்டுப்பற்று என்பது எட்டிப்பார்க்கும் நாட்களில் ஒன்று. அது வரையில் நாட்டுப்பற்று என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் ஒரு அமைப்பின் வீரர்கள், நம் தேசத்தின் பெயரால் ஆடும் கிரிக்கெட் ஆட்டம் அளவில் தான். இன்னொரு பக்கம் பார்த்தால் காஷ்மீரில் எப்போதாவது நம் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடையும் போது அனுதாபம் என்கிற போர்வையில் பற்று பீறிடும். இவை எல்லாம் நிகழ கால உண்மைகள், யாரும் மறுக்க இயலாத நம் தாயக நிலைமை.

இன்று சுதந்திர நாள் என்பது அலுவலகங்களிலும் , பள்ளி, கல்லூரிகளிலும் மட்டும் கொண்டாடப்படும் ஒரு விழாவாக மாறி விட்டது. இன்று நம் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தனியார் நிறுவனங்களில் ஆகஸ்ட் 15 ஒரு விடுமுறை நாளாக மட்டுமே பார்க்கப்படுகிறது. நண்பர்கள் தினம் , காதலர் தினம் போன்ற வியாபார நோக்கத்தோடு நம் மேல் திணிக்கப்பட்ட தினங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் மின்-அஞ்சல்களும், வாழ்த்துக்களும் இந்த சுதந்திர நாளுக்கு இல்லை என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பது இல்லை.இன்னும் சொல்லப்போனால் நிறைய நிறுவனங்களில் பாகிஸ்தானின் விடுதலை நாளைத்தான் இனிப்பு பரிமாறி கொண்டாடுகிறார்கள். தவறாக நினைத்து விட வேண்டாம் ஆகஸ்ட் 15 விடுமுறை ஆதலால் நம்மவர்கள் அதற்கு முந்தைய அலுவல் நாளிலேயே இனிப்புகள் பரிமாறி கொண்டாட்டத்தை முடித்து விடுகின்றனர் !.


இப்போதெல்லாம் தீபாவளி,பொங்கல் போல் இன்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் வேறு . அதில் சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகளின் வரலாறோ , இன்ன பிற செய்திகளோ இருக்காது . இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ற அடை மொழியில் திரையிடப்படும் திரைப்படங்கள், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் நாயகன்,நாயகியின் பேட்டிகள் போன்றவைதான் இருக்கின்றன. என்ன கொடுமை பாருங்க ? ஆனால் ஒரு அயல்நாட்டு தொலைக்காட்சியான டிஸ்கவரி சானல் அன்றைய நாள் முழுதும் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பு செய்தனர்.(சுதந்திரம் என்றால் என்ன ? அதன் முக்கியத்துவம் என்ன ? என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தவர்கள்) நான் ஒன்றும் டிஸ்கவரி போல் அனைத்து நிகழ்ச்சிகளையும் அப்படி தான் வேண்டும் என்று சொல்லவில்லை ஏனென்றால் டிஸ்கவரி போன்ற அலைவரிசைகளின் அடிப்படையே இது போன்ற நிகழ்ச்சிகள் தான். குறைந்தபட்சம் ஒரு நிகழ்ச்சியாவது உருப்படியாக இருக்கலாமே என்பது தான் என்னுடைய ஆதங்கம்.



தனி மனித முயற்சிதான் எந்த ஒரு சமூக அளவிலான மாற்றத்திற்கும் அடிப்படை, ஆகையால் நாம் அனைவரும்,ஒவ்வொரு தனி மனிதனும் நம்முடைய சுதந்திரத்தின் பெருமையையும்,அதற்கு கொடுக்கப்பட்ட விலையான தியாகங்களையும் உணர்வுபூர்வமாக மதித்து அந்த நாளை பெருமைப்படுத்த வேண்டும். அப்போது தான் வருங்கால தலைமுறையினர் வரையில் வரலாறு சென்றடையும். இல்லையென்றால் அப்பட்டமான சடங்காக இந்த நாள் வருங்காலத்தில் மாறி விடும் . காந்தியும்,பாரதியும்,கொடிகாத்த குமரனும் இன்ன பிற தியாகசீலர்களும் அவர்கள்தம் தியாகமும் புத்தக அளவிலேயே கரைந்து போய்விடும். அது போன்ற நிலை வராமலிருப்பது நம் கல்வி முறைகளிலும் மற்றும் நம் ஒவ்வொருவரின் கையிலும்தான் உள்ளது. தியாக வரலாற்றை போற்றி இந்தியன் என்று சொல்வதில் கர்வம் கொள்வோமாக !

வாழ்க பாரதம்...

Saturday, 9 August 2008

ஒலிம்பிக் கனவு...

இதோ உலக அரங்கில் ஒரு பிரமாண்டமான விளையாட்டு நிகழ்வு தொடங்கிவிட்டது ... , பதக்கம் பெறும் முயற்சியுடன். எத்தனை நாடுகள் எத்தனை மனிதர்கள் ...நாம் பெயர் கூட கேட்டிராத நாடுகள் தங்களின் பரிவாரங்களோடு புறப்பட்டு விட்டன, பதக்க வேட்டைக்கு. இனம்,தேசியம் உள்பட தங்களின் அனைத்து திறமைகளையும் வெளிக்காட்ட துடித்து கொண்டிருக்கின்றனர் ஒவ்வொரு வீரரும்.

வழக்கம் போல் நம் பாரதமும் பங்கு பெறுகிறது ... எத்தனை பதக்கம் கிடைக்கும் என்று ஒவ்வொரு நாடும் பட்டியலிடும் போது, ஒன்றாவது தேறுமா என்று இந்தியர்களாகிய நாம் ஏங்குவதை யாராலும் மறுக்க முடியாது. "Participation is more important than winning ", அதாவது வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கு பெறுவதே முக்கியமானது என்பதை நம்மவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் போலும் . பங்கு பெறுவதை மட்டும் தவறாமல் செய்து வருகிறோம். இன்று ஹாக்கி அணி தேர்வாகாமல் போனதை போல் ஒரு நாள், ஒருவருமே தேர்வாகாமல் பெருத்த அவமானம் ஏற்படலாம் .
அதே சமயம் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் நமது வீரர்களை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். நம் வீரர்களுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி இல்லை என்பது நிதர்சனம் மேலும் ஒவ்வொரு நாடும் ஆண்டுக்கணக்கில் வீரர்களை தயார் செய்யும் போது நாம் மட்டும் "சாகும் நேரத்தில் சங்கரா சொல்கிறோம்".

இதை போல ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்,கட்டுரைகள் ஒவ்வொரு ஒலிம்பிக்கின் போதும் புலம்பலாக,அறிவுரையாக வந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் நம் அரசாங்கம் என்ன செய்கிறது...எப்படி வீரர்கள் தேர்வு நடக்கிறது , பயிற்சி ? அதற்கான செலவீனங்கள் ..... ???ஒரு பிரபலமான பாடல் வரி நினைவில் வருகிறது " என்னமோ நடக்குது ! மர்மமா இருக்குது ! "
அது சரி இப்படி எல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறோமே ? நாம் எந்த அளவிற்கு இருக்கிறோம் ஐ.பி.ல் போட்டியில் ஆடும் வரை ஆடி விட்டு(நல்லா காசு பார்த்துட்டு) அப்புறம் ரொம்ப களைப்பா இருக்குன்னு சொல்லி இலங்கை போட்டிக்கு போகாம விளம்பர படத்துல நடிக்கிற தோனி மாதிரி ஆட்களை தலை மேல் வச்சுக்கிட்டு ஆடுறோமே. நாம எல்லாம் மாற்ற போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் கொஞ்சமாவது நம்ம நாடு தேறுமில்லையா ?
ஆகையால் மகா ஜனங்களே கொஞ்சம் புலம்பலை விட்டுவிட்டு நமது ரசனை, ஆர்வம் போன்றவற்றை ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் செலுத்தினால் ஒரு மறைமுக உதவியாக மேற்சொன்ன அணிகளுக்கு கிரிக்கெட் ஐ போல் விளம்பரதாரர்கலாவது கிடைப்பார்கள் .


கனவு காண தடையா என்ன ? கனவு காண்போம் ...நிஜமாகும் ஒருநாள் .

பீஜிங் ஒலிம்பிக்ஸ் துவக்க விழா- புகைப்படங்கள்