சிங்கார சென்னை,தமிழகத்தின் இதயம் என்றால் மிகை அல்ல.தமிழகத்தின் அரசியல் பொருளாதார மையம்.தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்தம் 39விழுக்காடு சென்னை மண்டலத்தில் இருந்து மட்டும் கிடைக்கிறது.தகவல் தொழில்நுட்பம்,வாகனம்,மின்னணு பொருள் உற்பத்தி,மருத்துவம் மற்றும் உயர் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.கொஞ்சம் சென்னையின் வரலாற்றை பார்ப்போமா ...
கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.
இன்றைய தினம் தான் அதாவது 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் நாள் முதன் முதலில் ஆங்கிலேயர்கள் கால் பதித்தனர். அன்றைய தினம் சென்னைப்பட்டினம் என்ற ஒரு சிறிய மீனவ கிரமமாக இருந்தது.பின்னர் ஆங்கிலேயர் அந்த இடத்தை தங்களது வணிகத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தனர். அன்றிலிருந்து சென்னை வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. அங்கிலேயர் மற்றும் பிரஞ்சு நாட்டவரும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.பின்னர் பிரஞ்சு தன் பார்வையை புதுச்சேரியின் பக்கம் செலுத்தியதால் ஆங்கிலேயர் முழுமையாக சென்னையில் கோலோச்சினர். அதன் பின் சென்னை வேகமாக வளர்ந்தது.ஆங்கிலேயரின் ஆட்சியில் தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கிய இந்நகர் ஒரு மாநகரமாக வளர்ந்தது. பிறகு தென்னிந்தியா முழுவதும் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதை மதறாஸ் மாநிலமாக்கி, மதறாஸ் நகரத்தை அம்மாநிலத்தின் தலைநகராக்கினர்.
இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் வருடம் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996ஆம் வருடம் தமிழக அரசாங்கம் மதறாஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. சென்னப்ப நாயக்கர் என்பவரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரிட்டிஷார் வாங்கியதால் சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.
1996ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு சென்னை என்று வழங்கப்பட்டு வருகிறது.கிட்டத்தட்ட ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சென்னை நகரின் வளர்ச்சி வியக்கத்தக்கது ஆகும்.